திருமணச் சட்டம் இல்லாததால் பாகிஸ்தானில் அவதிக்குள்ளாகும் இந்துப் பெண்கள்

Pak_Hindusபாகிஸ்தானில் வசித்து வரும் இந்துக்கள் தாங்கள் தொடர்ந்து பாரபட்சமாக நடத்தப்பட்டு வருவதாக குமுறிக் கொண்டுள்ளனர். இதுதொடர்பான போராட்டங்களையும் அவர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் இந்துக்கள் பல்வேறு இன்னல்களை அங்கு எதிர்கொண்டுள்ளனர். பல கொடுமைகளையும், கட்டாய மதமாற்றம் உள்ளிட்ட சிக்கல்களையும் சந்தித்து வருகின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது இந்துப் பெண்கள்தான். கட்டாய மதமாற்றம் செய்யப்படுவது, பாலியல் பலாத்காரங்கள், செக்ஸ் அடிமைகளை மாற்றப்படுவது என இவர்கள் சந்திக்கும் இன்னல்களை எழுத்தில் சொல்ல முடியாது.

பல இந்துப் பெண்கள் சிறுமிகளாக இருக்கும்போதே கட்டாயத் திருமணத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். அதன் பிறகு இவர்களது வாழ்க்கை நரகமாகி விடுகிறது.

பாகிஸ்தானில் உள்ள இந்துக்களின் நலனுக்காக திருமணச் சட்டம் என்ற ஒன்று இல்லை. இதுவே பாகிஸ்தான் இந்துப் பெண்கள் சந்தித்து வரும் கொடுமைகளுக்கு மூல காரணமாகும். சுதந்திரமடைந்து 69 ஆண்டுகளாகியும் அங்கு இந்து திருமணச் சட்டம் என்ற ஒன்றை அந்த நாட்டு அரசு இயற்றவே இல்லை.

இந்துப் பெண்கள் தங்களது திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்யவும் முடியாத அவலமும் உள்ளது. திருமணத்தை பதிவு செய்ய முடியாத பெண்கள் அடையும் இன்னல்களுக்கு அளவே இல்லை. தங்களுக்கு திருமணமாகி விட்டதை அவர்களால் சட்டப்பூர்வமாக நிரூபிக்க முடியாது. மேலும் கணவரின் சொத்துக்களில் பங்கு பெற முடியாது. விவாகரத்துக்குப் பிறகு உரிய நிவாரணத்தையும் பெற முடியாது. உடல் ரீதியான சித்திரவதைகளை காலம் முழுவதும் அவர்கள் அனுபவிக்கும் நிலையே உள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில்தான் பெரும்பாலான இந்துக்கள் வாழ்கின்றனர். இங்கு கட்டாய மதமாற்றங்கள் மிக மிக அதிகம். பல இந்துக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு முஸ்லீம்களாக மாற்றப்படுகின்றனர். அதாவது பெண்கள்தான் அதிக அளவில் மதமாற்றத்திற்குட்படுத்தப்படுகிறார்கள்.

சட்டப்பூர்வமான பாதுகாப்பு இவர்களுக்கு இல்லாததால் அவர்களால் எதிர்த்துப் பேச முடிவதில்லை. சட்டரீதியான நிவாரணத்திற்கும் வழியில்லை. பாலியல் பலாத்காரங்களுக்கும் இந்துப் பெண்கள் அதிக அளவில் உட்படுத்தப்படுகிறார்கள். இதற்கும் நியாயம் கிடைப்பதில்லை.

சிறார் திருமணங்களுக்குத் தடை இருந்தாலும் கூட, இந்து சிறுமிகள் பெருமளவில் கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். முஸ்லீம் ஆண்களிடம் சிக்கி சின்னாபின்னமாகிறார்கள்.

முஸ்லீம் ஆண்களால் மட்டுமல்லாமல் சொந்த இந்து ஆண்களாலும் கூட இந்துப் பெண்கள் பல சித்திரவதைகளை அனுபவிப்பதாக பாகிஸ்தான் சிறுபான்மையினர் நலனுக்கான வழக்கறிஞர் அமீர் நதீம் கூறுகிறார்.

பாகிஸ்தான் அரசு இந்து திருமணச் சட்டத்தை கொண்டு வர உத்தேசித்துள்ளது. இருப்பினும் முஸ்லீம்களிடமிருந்து கடும் எதிர்ப்புவரும் என்ற அச்சத்தால் கடந்த மாதம்தான் அதைத் தள்ளிப் போட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: