எங்களிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை மறந்து பேசுகிறது இந்தியா

pakistani-nuclear-weaponsஎங்களிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை இந்தியா மறந்துவிட்டது என்று பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.

இந்தியா–பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான 2 நாள் பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்தது. பாகிஸ்தானின் அடாவடி நடவடிக்கையால் பேச்சுவார்த்தை கடைசி நேரத்தில் ரத்து ஆனது. எனினும், இந்தியா கடுமையான நிபந்தனைகளை விதித்ததால்தான் பேச்சுவார்த்தையை ரத்து செய்தோம் என்று பாகிஸ்தான் சாக்கு போக்கு கூறி வருகிறது.

இதுபற்றி நேற்று இஸ்லாமாபாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் கூறியதாவது:–

பேச்சுவார்த்தை ரத்து ஆனதற்கு பாகிஸ்தான் காரணம் இல்லை. கடந்த ஆண்டு ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பிரதமர் மோடி, இந்த பிராந்தியத்தின் சக்தி வாய்ந்த நாடாக இந்தியாவை நினைத்துக் கொள்கிறார். ஆனால் பாகிஸ்தானிடம் அணுசக்தி இருக்கிறது என்பதை அவர் மறந்துவிட்டார்.

மோடியின் இந்தியா இந்த பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நாடுபோல் நடந்து கொள்ளுமேயானால்… நாங்களும் அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுதான். எங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும்.

இந்தியா தனது விருப்பப்படி இயல்பான சூழ்நிலையில் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று விரும்புகிறது. அப்படி என்றால் வர்த்தகம், போக்குவரத்து குறித்துதான் பேச முடியும்.

காஷ்மீர் ஒரு பிரச்சினை இல்லை என்றால் எல்லையில் 7 லட்சம் படை வீரர்களை இந்தியா குவித்து வைத்திருப்பது ஏன்?… இருநாடுகளுக்கும் இடையே காஷ்மீர் ஒரு பிரச்சினையாக உள்ளது என்பதையும் அதற்கு தீர்வு காணப்படவேண்டும் என்பதையும் சர்வதேச நாடுகள் விரும்புகின்றன.

தற்போதைய தந்திரம்(பேச்சுவார்த்தை ரத்து) வேலைக்கு ஆகாது என்பதை இந்தியா உணர வேண்டும். காஷ்மீர் மக்கள் தங்களுடைய தலைவிதியை நிர்ணயித்துக்கொள்ள பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா முன்வரவேண்டும்.

தீவிரவாதம் தொடர்பான பேச்சைக் கண்டு பாகிஸ்தான் ஓடிவிடவில்லை. பாகிஸ்தானில் இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ தீவிரவாதத்தை தூண்டிவிடுவதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

கீழே உள்ள செய்தியை படிக்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்…

-http://www.athirvu.com

TAGS: