டெல்லி : 2011-ம் ஆண்டின் மதவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள மொத்த மக்கள்தொகையில் இந்துக்களின் விகிதாச்சாரம் குறைந்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் சமூக, பொருளாதார அடிப்படையிலான விவரங்கள் கடந்த மாதம் 3-ந் தேதி வெளியிடப்பட்டன.
பல்வேறு அரசியல் கட்சிகள் கேட்டபோதிலும், சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. census இந்நிலையில், 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மதவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் வெளியிட்டுள்ளார்.
2011-ம் ஆண்டில் நாட்டின் மொத்த மக்கள்தொகை 121 கோடியே 9 லட்சம். கடந்த 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பில், 102 கோடி மக்கள் தொகைதான் இருந்தது. எனவே, மக்கள்தொகை 17.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்துக்களின் எண்ணிக்கை 96.63 கோடி (79.8 சதவீதம்), முஸ்லீம்களின் எண்னிக்கை 17.22 கோடி(14.2 சதவீதம்), கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.78 கோடி (2.3 சதவீதம்), சீக்கியர்களின் எண்ணிக்கை 2.08 கோடி(1.7 சதவீதம்) புத்த மதத்தினர் எண்ணிக்கை 0.84 கோடி (0.7 சதவீதம்), ஜெயின் மதத்தினர் எண்ணிக்கை 0.45 கோடி (0.4 சதவீதம்), பிற மதத்தினர் 0.79 கோடி (0.7 சதவீதம்), எந்தஒரு மதத்தையும் குறிப்பிடாதவர்கள் 0.29 கோடி (0.2 சதவீதம்) என்று கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்துக்களின் எண்ணிக்கை 96 கோடியே 63 லட்சம். மொத்த மக்கள்தொகையில் இது 79.8 சதவீதம். 2001-ம் ஆண்டில் இருந்ததை (82 கோடியே 75 லட்சம் பேர்-80.45 சதவீதம்) விட தற்போது இந்துக்களின் எண்ணிக்கை 16.8 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், மொத்த மக்கள்தொகையில் இந்துக்களின் விகிதாச்சாரம் 0.7 சதவீதம் சரிவடைந்துள்ளது.
2011-ம் ஆண்டு நிலவரப்படி, முஸ்லிம்களின் மக்கள்தொகை 17 கோடியே 22 லட்சம் ஆகும். இதன் சதவீதம் 14.2. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை (13 கோடியே 80 லட்சம் பேர்-13.4 சதவீதம்) விட தற்போது முஸ்லிம்களின் எண்ணிக்கை 24.6 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுபோல், மொத்த மக்கள்தொகையில் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் 0.8 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த கணக்கெடுப்பில், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 78 லட்சம் (2.3 சதவீதம்), சீக்கியர்கள் எண்ணிக்கை 2 கோடியே 8 லட்சம் (1.7 சதவீதம்), புத்த மதத்தினர் எண்ணிக்கை 84 லட்சம் (0.7 சதவீதம்), ஜெயின் மதத்தினர் எண்ணிக்கை 45 லட்சம் (0.4 சதவீதம்), இதர மதத்தினர் எண்ணிக்கை 79 லட்சம் (0.7 சதவீதம்), மதத்தை குறிப்பிட விரும்பாதோர் எண்ணிக்கை 29 லட்சம் (0.2 சதவீதம்) என்றும் கூறப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை 15.5 சதவீதமும், சீக்கியர்கள் எண்ணிக்கை 8.4 சதவீதமும், புத்த மதத்தினர் எண்ணிக்கை 6.1 சதவீதமும், ஜெயின் மதத்தினர் எண்ணிக்கை 5.4 சதவீதமும் அதிகரித்துள்ளது.
ஆனால், மொத்த மக்கள்தொகையில் கிறிஸ்தவர்கள் மற்றும் ஜெயின் மதத்தினர் விகிதாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றம் ஏற்படவில்லை. சீக்கியர்கள் விகிதாச்சாரம் 0.2 சதவீதமும், புத்த மதத்தினர் விகிதாச்சாரம் 0.1 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளன.