சென்னை: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சிஸ்டினோசிஸ் பவுண்டேஷனுடன் இணைந்து அரிய வகை மரபணு நோயான சிஸ்டினோசிஸுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளனர். அந்த மருந்திற்கு சிஸ்டோமைன் பிடார்டிரேட் எனப் பெயரிடப் பட்டுள்ளது. ‘சிஸ்டினோசிஸ்’ என்பது அரிய வகை மரபு சார்ந்த நோயாகும். பெரும்பாலும் உறவுக்குள் திருமணம் முடித்து குழந்தை பெறுபவர்களுக்கு இந்த நிலை வரும் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்தநோய் தாக்கப்பட்டவர்கள் உலகம் முழுவதும் 2 ஆயிரம் பேர் உள்ளனர். இந்தியாவில் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர்தான் தற்போது உயிருடன் உள்ளனர். இதில் தமிழகத்தில் 7 பேர் உள்ளனர்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை பிறந்து 6 மாதத்தில் அடையாளம் கண்டுவிட முடியும். அதாவது அந்த குழந்தைகள் சாதாரண குழந்தைகள் மாதிரி வளர்ச்சி இல்லாமல் குறைந்த வளர்ச்சியில்தான் காணப்படுவார்கள். அதாவது இந்த நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அனைத்து உறுப்புகளின் செல்களில் அமினோ அமில சிஸ்டைன்கள் தங்கி, அந்தந்த உறுப்புகளை பாதிக்க வைப்பதில் முன்னணியில் உள்ளது.
குறிப்பாக என்ன சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் உடம்பில் சேராமல் சிறுநீருடன் கலந்து வெளியேறிவிடும். குளுகோஸ், அமினோ அமிலம், பொட்டாசியம், உப்பு உள்ளிட்ட உடல் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தும் வெளியேறிவிடுகிறது. அதனால் அந்த குழந்தை வளர்ச்சி இல்லாமல் இருப்பார்கள்.
மேலும் இந்தக் குழந்தைகளுக்கு சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றில் பிரச்சினை ஏற்படும். வளர்ச்சி தடைப்படும். எலும்புகள் முறையாக வளராது, தளர்வாக காணப்படும். மேலும் பல பிரச்சினைகளும் வரும்.
சிஸ்டகான் என்ற மருந்தை சாப்பிட்டால் நோயின் தன்மை தீவிரம் அடையாமல் இருக்கச் செய்ய முடியும். இந்த மருந்து தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுத்தான் கொடுக்கப்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருந்து செலவில் இந்திய சிஸ்டினோசிஸ் அறக்கட்டளை உதவி வருகிறது.
இந்நிலையில், சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், சிஸ்டினோசிஸ் அறக்கட்டளையுடன் சேர்ந்து இந்த நோய்க்கு புதிய மருந்து ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் புதிய மருந்திற்கு சிஸ்டோமைன் பிடார்டிரேட் எனப் பெயரிடப் பட்டுள்ளது.