ஜாதிவாரி இடஒதுக்கீடு தேவையில்லை: சொல்வது ஆர்.எஸ்.எஸ். எம்.ஜி. வைத்யா

rss-m-g--vaidyaடெல்லி: ஜாதிவாரியான இட ஒதுக்கீடு என்பது தேவையில்லை… பொருளாதார ரீதியான இடஒதுக்கீடே அவசியமானது என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர் எம்.ஜி. வைத்யா கூறியுள்ளார்.

இது தொடர்பாக தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியின் சுருக்கம்:

தற்போது ஜாதிவாரி இடஒதுக்கீடு என்பது தேவையில்லை. ஏனெனில் எந்த ஒரு ஜாதியும் பிற்படுத்தப்பட்டதாக இருக்கவில்லை. அதேபோல் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவருக்கும் கூட இனி 10 ஆண்டுகளுக்கு மட்டுமே இடஒதுக்கீட்டை வழங்கலாம். அதன் பின்னர் ஒட்டுமொத்தமாக இடஒதுக்கீடு என்ற நடைமுறையையே ஒழித்துக் கட்டிவிடலாம்.

குஜராத்தில் அனைத்து தொழில்துறையும் படேல்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது. அவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது தேவைதானா? மகாராஷ்டிராவில் மராத்தாக்கள் இடஒதுக்கீடு கோருகிறார். அந்த மாநிலத்தின் பெரும்பான்மையான முதல்வர்கள் மராத்தா சமூகத்தவரே. பிற மாநிலங்களில் ஜாட்களும் குஜ்ஜார்களும் இடஒதுக்கீடு கோருகின்றனர். உண்மையில் அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களா?

அரசுகளே கூட வாக்கு வங்கி அரசியலுக்காக இந்த கோரிக்கைகளை ஊக்கப்படுத்தி ஆதரவளிக்கின்றன. ஜாதி ரீதியான இடஒதுக்கீடு என்பது ஜாதிய பிரிவினைகளை ஒழிப்பதற்கு பதிலாக அவற்றை இறுக்கமாக நிலைநிறுத்துகின்றன. முதலமைச்சர் அல்லது கலெக்டராக இருப்பவரின் மகனுக்கு இடஒதுக்கீடு தேவைதா? பொருளாதார ரீதியான இடஒதுக்கீடுதான் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், மராத்தாக்கள், பிராமணர்கள் உட்பட அனைத்து சமூகத்துக்கும் பயன்படும்.

குஜராத்தின் ஹர்திக் படேல் கூறுவதைப் போல, அனைவருக்கும் இடஒதுக்கீடு கொடுங்கள் அல்லது இடஒதுக்கீட்டை முறையையே அழித்துவிடுங்கள் என்பதை ஆதரிக்கிறேன். அவர் மிகச் சரியாகத்தான் கூறி இருக்கிறார்.

ஜாதிய அடிப்படையில் இருந்து என்பது மாறி பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என வரும்போது இந்த முறையே நிரந்தரமானதாக இல்லாமல் போய்விடும். ஜாதிய இடஒதுக்கீடு என்பது தங்களது ஜாதியை நினைவில் கொள்ளத்தான் வகை செய்யும். அப்படி என்கிற போது எப்படி ஜாதியத்தை நீங்கள் ஒழித்துவிட முடியும்?

tamil.oneindia.com

TAGS: