இனி யோகா ஒரு விளையாட்டு.. நிதி உதவியும் கிடைக்கும்: மத்திய அரசு அங்கீகாரம்

yoga-600டெல்லி: யோகாவை விளையாட்டுகளில் ஒரு பிரிவாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. மேலும் யோகாவை முதன்மை விளையாட்டுப் பிரிவுப் பட்டியலில் சேர்த்திருப்பதால் நிதி உதவியுடம் கிடைக்க இருக்கிறது.

மத்தியில் பாரதிய ஜனதா அரசு தலைமை ஏற்ற பின்னர் யோகாவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிரதமர் மோடியின் முயற்சியால் ஐக்கிய நாடுகள் சபையும் யோகா தினத்தை அறிவித்தது.

இந்த நிலையில் யோகாவை விளையாட்டுகளில் ஒரு பிரிவாக அதுவும் முதன்மைப் பிரிவில் சேர்த்துள்ளது மத்திய அரசு. அதாவது விளையாட்டுகள் முதன்மைப் பிரிவு, பொதுப் பிரிவு, இதர பிரிவு என வகைப்படுத்தப்பட்டுள்ளன. முதன்மைப் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள விளையாட்டுகளுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்கும்.

அதேபோல பொதுப் பிரிவில் இடம்பெற்றுள்ள விளையாட்டுகளுக்கும் குறிப்பிட்ட அளவு நிதியுதவி வழங்கப்படும். ஆனால் இதரப் பிரிவின் கீழ் உள்ள விளையாட்டுகளுக்கு எந்த விதமான நிதியும் வழங்கப்படமாட்டாது.

இந்நிலையில் விளையாட்டுகளை வகைப்படுத்துவது, அதில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில் யோகாவையும் ஒரு விளையாட்டாக அங்கீகரிக்க மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதை முதன்மைப் பிரிவின் கீழ் சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முதன்மைப் பிரிவில் கால்பந்து, நீச்சல், செஸ், ஸ்குவாஷ் உள்ளிட்ட விளையாட்டுகள் ஏற்கெனவே இடம்பெற்றுள்ளன. மேலும் இதர பிரிவின் கீழ் இருந்த வாள் சண்டை விளையாட்டை பொதுப் பிரிவுக்கு மாற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: