காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் பலி

kashhஸ்ரீநகர், செப். 2- எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் தொடர் அத்துமீறல், இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு, எல்லை வழியாக ஊடுருவத் துடிக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதி வேலை ஆகியவற்றை முறியடிப்பதற்காக கடுமையாக போராடிவரும் இந்திய ராணுவ வீரர்கள் காஷ்மீரில் ரகசியமாக இயங்கிவரும் உள்நாட்டு தீவிரவாதிகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதி அருகே அமைந்துள்ள பாரமுல்லா மாவட்டத்தின் ரபியாபாத் பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து, இந்திய ராணுவத்தினர் இன்று காலை 7 மணியளவில் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர்.

ராணுவ வீரர்களிடம் பிடிபடாமல் இருப்பதற்காக அவர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவத்தினரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ வீரர் பலியானதாகவும் அங்கு பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை பிடிக்க தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்துள்ள பகுதியில் தலைக்கு தலா 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள இரு தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

-http://www.maalaimalar.com

TAGS: