புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் செயல்பாடு காரணமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள், இந்தியாவை பெரிதும் விரும்ப துவங்கியுள்ளனர். தாங்கள் இந்தியாவுடன் இணைய வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.கடந்த 2014ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போதும், 2015ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின் போதும், இந்திய அரசின் உதவி அப்பகுதி மக்களை பெரிதும் கவர்ந்துவிட்டது.
சமீபத்தில் அங்கு சென்றிருந்த அன்ஜூமான் மின்ஹாஜ் இ ரசூல் தலைவர் மவுலானா சையத் அத்கர் ஹூசைன் தெல்காவி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை, இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை கண்டு மக்கள் அதிகம் வெறுப்படைந்துள்ளனர். அவர்கள் அமைதியாக வாழ விரும்புகின்றனர். அவர்களுக்கு ஓட்டுப்போடும் ஒரு வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் இந்தியாவுடன் இணைவார்கள். அவர்கள் இந்தியாவை பற்றி உயர்வான எண்ணம் வைத்துள்ளனர். அவர்கள் நிச்சயம் இந்திய குடிமகனாக இருக்கவே விரும்புகிறார்கள். பிரதமர் மோடியின் சிறந்த நிர்வாகம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை பெரிதும் கவர்ந்துவிட்டது என கூறினார்.
மேலும், பாலுசிஸ்தான் மற்றும் கராச்சியில் வசிக்கும் மக்கள் இந்தியாவுடன் நெருங்கிய உறவை தொடர விரும்புகிறார்கள் எனவும் கூறினார்.
சமீப காலமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பாகிஸ்தானுக்கு எதிராக குரல்கள் எழுந்துள்ளது, அந்நாட்டிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 7 ம் தேதி இங்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ெஷரீப் வந்த போது, நவாஸ் திரும்பி போ என ஏராளமான மக்கள் குரல் எழுப்பினர்.. வெள்ளத்தால் மாநிலம் பாதிக்கப்பட்ட போது, பாகிஸ்தான் அரசு செய்த மந்தமான மீட்பு பணியே இதற்கு காரணம். பல வருடங்களாக தாங்கள் பல கொடூர செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தாங்களை பாகிஸ்தான் அரசு கண்டுகொள்ளவில்லை எனவும், இங்கு பயங்கரவாத முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு வசிக்கும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அங்கு மோசமான சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த வருடம் பிரதமர் மோடி காஷ்மீர் சென்ற போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக அறிவித்தார்.
-http://www.dinamalar.com