கட்டக், செப்.3- ஒடிசா மாநிலத்தில் உள்ள சிஷூ பவன் என்ற குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 61 பச்சிளங்குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
இதையடுத்து, ஒடிசாவை ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சிக்கெதிராக பா.ஜ.க உட்பட எதிர்க்கட்சியினர் பல்வேறு அரசு மருத்துவமனைகள் முன்பாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 5 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அலட்சியமான நடத்தையினால் பச்சிளங்குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாக இருந்த 3 ஊழியர்கள் மீது கிரிமினல் விசாரணையும் நடத்தப்படவுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒடிசா அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது குறை கூறி வரும் நிலையில், அந்த மருத்துவமனையின் மூத்த அதிகாரி நிரஞ்சன் மொகந்தி, “இங்கு, ஒரு நாளைக்கு 50 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்படுகின்றனர். வெளி நோயாளிகளாக மட்டுமே ஒரு நாளைக்கு 500 குழந்தைகளுக்கும் மேல் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இவ்வளவு அழுத்தங்கள் இருக்கும் போது, நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று கேள்வியெழுப்புகிறார்.
இப்படியே அரசும் ஊழியர்களும் மாறி மாறி ஏதாவது காரணம் சொல்லிக் கொண்டிருந்தால் இறந்த குழந்தைகளின் உயிர்களுக்கும், சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுடைய உயிர்களின் உத்தரவாதத்திற்கும் யார் பொறுப்பு? என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.
-http://www.maalaimalar.com