தமிழ்.. தமிழ் என்று சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.. சொல்கிறார் எச்.ராஜா

h-rajaமதுரை: தமிழ்…. தமிழ்…..என்று சொல்லிக்கொண்டு தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதை கைவிட வேண்டும். ஐ.நா. சபையில் இந்தியும் ஒரு அலுவல் மொழியாக ஏற்கப்பட்டால் அது 121 கோடி மக்களுக்கு கிடைக்கும் பெருமையாகும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார்.

மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐ.நா. சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் 6 மொழிகள் அலுவல் மொழியாக உள்ளன. 7வது மொழியாக இந்தியை சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறி இருக்கிறார்.

இதற்கு முன்னாள் முதல்வசர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். பாஜகவைப் பொறுத்தவரை இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் பெருமைப்படுத்தத்தான் நினைக்கிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூட, நாடாளுமன்றத்திலும், ஐ.நா. சபையிலும் தமிழ்மொழியின் சிறப்பை பற்றி பேசி இருக்கிறார்.

திமுக மற்றும் சில திராவிட இயக்கங்களில் உள்ளவர்கள் தமிழ் பற்றாளர்கள் அல்ல. அவர்கள் வேற்றுமொழிக்கு வெறுப்பாளர்கள். இவர்களின் இத்தகைய அணுகுமுறையால்தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். பாதிக்கப்படுகிறார்கள். எந்த சமுதாயத்தினருடனும் தமிழர்கள் இணங்கி சென்றுவிடக்கூடாது என்பதுதான் கருணாநிதி மற்றும் அவரது கம்பெனியினரின் விருப்பமாக உள்ளது.

எனவே தமிழ்…. தமிழ்…..என்று சொல்லிக்கொண்டு தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதை அவர்கள் கைவிட வேண்டும். ஐ.நா. சபையில் இந்தியும் ஒரு அலுவல் மொழியாக ஏற்கப்பட்டால் அது 121 கோடி மக்களுக்கு கிடைக்கும் பெருமையாகும்.

தமிழை வைத்து கருணாநிதி அரசியல் பிழைப்பு நடத்தி வருகிறார். ஏழை தொழிலாளியின் குடும்பத்தினர் வேறு மொழியை கற்க முட்டுக்கட்டை போடுகிறார்.

வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் மோடி அலை வரவேண்டும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 100 சதவீத வெற்றியை பெற வேண்டும். அப்போதுதான் டெல்லி ராஜ்யசபாவில் கணிசமான பிரதிநிதித்துவம் கிடைக்கும். விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றார் அவர்.

tamil.oneindia.com

TAGS: