இன்று முதல் சசிபெருமாள் குடும்பத்தினர் மீண்டும் தொடர் உண்ணாவிரதம்

SASI_PERUMALசேலம் : மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்தினர் இன்று முதல் மீண்டும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக் கடையில் மதுபான கடையை அகற்ற கோரி, கடந்த ஜுலை 31 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது செல்போன் டவரில் ஏறிய காந்தியவாதி சசிபெருமாள் உயிர் இழந்தார். sasiperumal இதனை தொடர்ந்து, மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலைக் கூட வாங்காமல் குடும்பத்தினர் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கேட்டுக்கொண்டதையடுத்து, சசி பெருமாளின் உடலை உறவினர்கள் பெற்று இறுதிச் சடங்கு நடத்தினர். அப்போது உண்ணாவிரதத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அவரது மகன் மற்றும் உறவினர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில், சசிபெருமாளின் சொந்த கிராமமான சேலத்தையடுத்த இ.மேட்டுக்காடு கிராமத்தில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப் போவதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்தனர். இன்று தொடங்கும் இந்த உண்ணாவிரதம் சட்டமன்ற நடப்பு கூட்ட தொடர் முடியும் வரை தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர்கள் கூறினர்.

tamil.oneindia.com

TAGS: