இந்தியாவின் போர் வெறிக்கு நாங்களும் தயார்… பலத்த இழப்பை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் மிரட்டல்

pak-defministerஇஸ்லாமாபாத் : இந்தியாவின் போர் வெறி மேலோங்கினால் சிறிய அல்லது நீண்ட போருக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றும் அந்த போர் இந்தியாவுக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தும் எனவும், அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.

இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாக், எல்லையில் போர் மூளும் சூழல் நிலவி வருவதால், ராணுவ வீரர்கள் தயராக இருக்க வேண்டும் என்று அண்மையில் கூறியிருந்தார். இதையடுத்து, பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் பாகிஸ்தான் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், பாகிஸ்தான் நாடு அமைதியில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், ஆனால் எந்த தாக்குதலுக்கும் எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு தெரியும் எனவும் கூறியுள்ளார். இந்திய ராணுவ தளபதியின் கருத்து குறித்து பேசிய ஆசிப், இந்தியா சிறிய அல்லது நீண்ட போரை தொடுத்தால் அதற்கு சரியான பதிலடி கொடுக்க பாகிஸ்தான் முழு அளவில் தயாராகவுள்ளது எனவும் கூறியுள்ளார்.

இதற்கு முந்தைய போர்கள் குறித்து அவர் பேசுகையில், கடந்த 1965ம் ஆண்டு இந்திய படைகளின் தாக்குதல்களை பாகிஸ்தான் படையினர் முறியடித்ததாகவும், 1965ம் ஆண்டில் லாஹூரை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் கனவை பாகிஸ்தான் படைகள் நசுக்கியதாவும் தெரிவித்தார்.

வருங்காலத்திலும் இதனையே நாங்கள் செய்வோம் எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த 50 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட அதிக அனுபவம் மற்றும் செயல் திறனுடன் பாகிஸ்தான் ராணுவம் தற்பொழுது உள்ளது எனவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

தீவிரவாதத்திற்கு எதிராக பல வருடங்களாக எங்களது படைகள் போரிட்டு வந்துள்ளன. எந்த சவாலையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என எங்களுக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். எனினும், பிரதமர் நவாஸ் ஷெரீப் அமைதியில் நம்பிக்கை கொண்டுள்ளார் என ஆசிப் கூறியுள்ளார்.

தற்போது எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் எழுந்துள்ள பதற்றம் மற்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தானிய படைகளுக்கு இடையே நடந்து வரும் துப்பாக்கி சூடு ஆகியவற்றால் இரு நாடுகளிடையே போர் மூளும் சூழல் எழுந்துள்ளது.

tamil.oneindia.com

TAGS: