அறிமுகம் – தமிழகத்தின் நிலவியல் அமைப்புகள்

tamilnaduவரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும் முன்பு, நாம் வாழும், வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழகம், எத்தகைய இயற்கைச் சூழலைக் கொண்டு அமைந்துள்ளது என்றும், எத்தகைய தட்பவெட்ப நிலை மாற்றங்களைப் பெற்றது எனவும், அவை எந்தெந்தக் காலங்களில் எவ்வாறெல்லாம் வேறுபட்டவை என்பதையும், நம் நாகரிகத்தின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் எவ்வாறு துணை நின்றன என்பதையும் உணர்ந்துகொண்டால்தான், நமது வரலாற்றிலும் பண்பாட்டிலும் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

மனிதன் வாழ, நீராதாரமும் நிலவளமும் இன்றியமையாததாகும். நீராதாரத்தின் அடிப்படையிலேயே பெரிய பெரிய நாகரிகங்கள் தோன்றின என்பது வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வில் வெளிப்படுத்திய முதல் கருத்தாகும். அதன் அடிப்படையில் நம் தமிழகத்தை உற்று நோக்கினால்தான், நமக்கு அதன் இயற்கை அமைப்பையும், அதற்கேற்ப அமைந்த நில அமைப்பையும், அதனை அடியொட்டிய நாகரிக வளர்ச்சியையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

மனிதன், எங்கிருந்து எந்தத் திசையை நோக்கி நகர்ந்தான் என்றும், அவன் நகர்ந்தானா அல்லது இயற்கையின் அமைப்பால் அவன் நகர்த்தப்பட்டானா என்பதையும், தமிழகத்தின் இயற்கைச் சூழல் எப்படி அமைந்திருந்தது என்பதை உணர்ந்தால்தான், இக்கருத்தை தெளிவாக அறிந்து, ஏற்றுக்கொள்ள முடியும். எனவே, முதலில் தமிழகத்தின் இயற்கை அமைப்பைப் பற்றி நாம் அறிந்துகொள்வது அவசியமல்லவா? எனவே, வாருங்கள், முதலில் நம் நாகரிகத் தமிழகத்தின் இயற்கை அமைப்பை தெரிந்துகொள்வோம்.

*

 

‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறு நல்லுலகம்’

என்று பனம்பாரனார், தமிழகத்தின் எல்லையை தொல்காப்பியப் பாயிரத்தில் எடுத்துரைக்கிறார். (இந்த எல்லை வரையறை குறித்து கருத்து மாறுபாடுகள் உண்டு).

தமிழகத்தின் கிழக்கிலும் தெற்கிலும் மேற்கிலும் கடல் சூழ்ந்துள்ளது. தென்குமரிக்குத் தெற்கில் சில நிலப்பகுதிகள் அமைந்திருந்தன என்ற கூற்றும் உண்டு. அவை, கடல்கோளால் கவரப்பட்டது என்பர். பாண்டிய நாடு, குமரிமுனைக்குத் தெற்கேயும் நெடுந்தொலைவு பரவியிருந்தது. ‘இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய…’ என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.*1 அதாவது, நாற்புறமும் நீரால் சூழப்பட்டிருந்த பெருநிலப்பரப்பு என்று பொருள்.

கடல்கோளால் மூழ்கிப்போன நிலப்பகுதிகளுக்கு ‘லெமூரியா கண்டம்’ என்று பெயரிட்டு அழைத்தனர். சர்வால்டர் ராலே, பேராசிரியர் ஹெக்கல், சர் ஜான் ஈவின்ஸ், ஸ்காட் எலியட், சர். ஜே.டபிள்யூ. ஹேல்டர்னஸ் ஆகிய ஆய்வறிஞர்கள், குமரிக்குத் தெற்கே நிலப்பகுதி ஒன்று இருந்ததை ஏற்றுக்கொண்டுள்ளனர்.*2 (கண்டம் என்ற சொல், இன்று பொருள் தருவதுபோல் மிகப்பெரிய நிலப்பரப்பை குமரிக்கண்டத்தில் காண வேண்டுமா என்பதில் ஆய்வாளர்கள் இன்று முரண்படுகின்றனர். ஆனால், கணிசமான நிலம் கடலில் மூழ்கியுள்ளதைப் பொதுவில் ஏற்கின்றனர். பல கடல்கோள்கள் தமிழகத்தைத் தாக்கியதால், தென்பகுதி மூழ்கியுள்ளதைக் கடலடி ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. தென்பகுதி மட்டுமல்லாது, கிழக்கிலும் மேற்கிலும்கூட, கடல்கோள்களால் நிலப்பகுதிகளை தமிழகம் இழந்துள்ளது. அப்படி ஒரு கடல்கோளில் மூழ்கிய நிலங்களில் ஒன்றுதான் ‘கடலில் மூழ்கியுள்ள காவிரிப்பூம்பட்டினம்’ என்பதை நினைவுபடுத்திக்கொள்ளலாம்). ஆக, வடக்கில் தக்காணப் பீடபூமி; கிழக்கிலும் மேற்கிலும் தெற்கிலும் கடல்கள். இதுவே, பழந்தமிழகத்தின் எல்லைகளாக அமைந்திருந்தன என கே.கே.பிள்ளை அவர்கள் தெரிவிக்கிறார்.*3

சங்ககாலத் தமிழகத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, கிருஷ்ணா நதிக்குத் தெற்கே கன்னியாகுமரி வரை உள்ள நிலப்பரப்பு, மூன்று பெருவேந்தர்களாலும், ஏழு குறுநில மன்னராலும் ஆளப்பட்டது. மலைகளும் நாடுகளும், குறுநில மன்னர்களுக்கு உரியவையாக இருந்தன.

கிழக்குக் கடற்கரை ஓரமாக, கிருஷ்ணா நதியின் தொடக்கம் முதல், இராமநாதபுரம் பகுதியிலுள்ள தொண்டி வரையிலும் அமைந்த பகுதி முழுவதும் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. திருக்கோயிலூரைச் சேர்ந்த மலை நாடு, மலையமானுக்கு உரியதாக இருந்தது. சோழ நாட்டின் தென் பகுதியில், பாண்டியர் நாடு இருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில், ஆயின் மலை நாடு இருந்தது. ஆய் பற்றி தாலமி குறிப்பிடும்போது, அய்ஒய் (Aioi) எனக் குறிப்பிடுகின்றார்.*4

தூத்துக்குடி அருகே உள்ள கொற்கை துறைமுகத்தை அடுத்து எவ்வி நாடு இருந்தது. இதற்கு வடக்கே, கடற்கரையை அடுத்து சேர நாடு இருந்தது. பாலக்காட்டுக்கு வெளிப்புறத்தே கோவை, சேலம் வரையிலும் தொடர்ந்திருந்தது. தென் மைசூரில் தொடங்கி, ஒன்றின் பக்கம் ஒன்றாக, இருங்கோவேளின் அரயம் நாடும், பாரியின் பறம்பு நாடும், அதியமானின் தகடூரும், ஓரியின் கொல்லிமலையும் இருந்தன. முதல் மூன்று நாடுகளும், மைசூர் எல்லைக்குள் இருந்தன.

இந்த எல்லைக்கு அப்பால், கிழக்கே கங்கர் நாடும், தெற்கே கொங்கு நாடும் இருந்தன. தமிழ்நாட்டின் மேற்கேயுள்ள வட எல்லைப்பகுதி துளுவ நாட்டரசனாகிய நன்னனுக்கும், கிழக்கேயுள்ள வட எல்லைப்பகுதி வேங்கடத்துப் புல்லிக்கும் உரியனவாக இருந்தன. அதற்கு வடக்கே ஆரிய நாடும், தண்டகாரணியமும் இருந்தன.*5

இவற்றின் மூலம், தமிழரின் நாகரிகம், பண்பாடு எவ்வாறு அமைந்திருந்தன என நிலவியலோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மனிதனின் நாகரிக வளர்ச்சிக்கு, பூகோள அமைப்பும் ஓர் அடிப்படை காரணம் என்பதை உணரலாம்.

மலைத் தொடர்கள்

தமிழகத்தின் இயற்கை வளத்தில் அடுத்து குறிப்பிடத்தக்கவை, மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலை, நீண்ட உயர்ந்த சுவர்போலக் காட்சியளிக்கிறது. இந்த மலைத் தொடரில், கோவைக்கு அருகில் அமைந்த பாலக்காட்டு கணவாய், திருநெல்வேலி மாவட்டத்தின் எல்லையில் காணப்படும் ஆரல்வாய்மொழி கணவாய், மேற்கே அமைந்த செங்கோட்டைக் கணவாய் போன்றவை முக்கியமானவை. *6

மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள பல கணவாய்கள் வழியாக மக்கள் போக்குவரத்து காணப்படுகிறது. இந்தக் கணவாய்கள், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய அண்டை மாநில எல்லைப் பகுதிகளில் இருப்பதால், அந்தந்த மாநிலங்களுக்கும் தமிழகத்துக்கும் தொடர்புடைய வரலாற்றுச் சான்றுகளைக் காண முடிகிறது. தமிழக வரலாறும், இதன் அடிப்படையிலேயே வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் தொடர்ந்து வரும் காலங்கள் வரை வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனைமலைக்கும் ஆனைமுடிக்கும் இடையே காணப்படும் பாலக்காட்டுக் கணவாய், சிறப்பு வாய்ந்த சமவெளிப் பகுதியாகும். இங்கிருந்துதான், வடக்கே நொய்யல் ஆறும், தெற்கே அமராவதியும் உற்பத்தியாகின்றன.*7

அ. மேற்குத்
தொடர்ச்சி மலை

மேற்குத் தொடர்ச்சி மலை, அடர்த்தியான காடுகளையும், ஏராளமான வன விலங்குகளையும் கொண்ட செழிப்பான பூமி. மேற்குத் தொடர்ச்சி மலையில் பல உயரமான பகுதிகள் உள்ளன. நீலகிரி மலைப் பகுதியில் உள்ள தொட்டபெட்டா சிகரம், 2670 மீட்டர் உயரம் கொண்டது. இதுவே, மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக உயரமான மலைப்பகுதி ஆகும்.*8

ஆ. கிழக்குத் தொடர்ச்சி மலை

கிழக்குத் தொடர்ச்சி மலையில் மிக உயரமான பகுதிகளும், அடர்ந்த வனப்பகுதியும் இல்லை. மேற்குத் தொடர்ச்சி மலையைவிடப் பழமையான இது, ஒடிஸா மாநிலத்தில் தொடங்கி, தெற்கு நோக்கிச் சென்று, மேற்கே தொடர்ந்து, தென் மேற்காக நீண்டு, நீலகிரிப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையுடன் இணைகிறது. கிழக்குத் தொடர்ச்சி மலை, இடைவெளிகள் நிறைந்தது. இதில், சிறு சிறு குன்றுகள் நிறைய உள்ளன. பெரிய குன்றின் உயரம் 1828 மீட்டர்.*9

மேற்குத் தொடர்ச்சி மலைக்கும், கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் இடைப்பட்ட சமவெளிப் பகுதி, மேற்கிலிருந்து கிழக்காக, சாய்வான நிலையில் காணப்படுகிறது. அதனால்தான், மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் ஆறுகள் கிழக்காக ஓடி வங்கக் கடலில் கலக்கின்றன. இவ்வாறு ஓடும் தமிழக ஆறுகளில் மிகவும் சிறப்பாகக் குறிப்பிடப்படுபவை – காவிரி, வைகை, தென்பெண்ணை, தாமிரபரணி, பாலாறு, செய்யாறு.

மேற்குத் தொடர்ச்சி மலைக்கும், கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் கீழ்ப்புறத்தில், பல சமவெளிப் பகுதிகள் விட்டு விட்டு அமைந்துள்ளன. நீலகிரிப் பகுதியிலும் பல சமவெளிப் பகுதிகள் உள்ளன. இந்தச் சமவெளிப் பகுதிகளில், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த மக்கள், ஆங்காங்கே தனித்தனியாக தங்கி, ஒரு குழுக் கூட்டமாக, தன்னிச்சையாக வாழ முற்பட்டனர். பின்னர், தங்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து வாழத் தொடங்கினர். தலைவனுடன் காணப்பட்ட குழுக் கூட்டமானது, சற்று மாற்றம் பெற்று, அதன் வளர்ச்சியாக, குறு நாடுகளாக ஆங்காங்கே உருவாகின. இத்தகைய குறு நாடுகள் சிற்றரசுகளாக மாறி, பின்னர் நாட்டரசுகளாக பெரிதாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஒரு நாட்டின் பண்பாட்டு வளர்ச்சிக்கு, அந்நாட்டின் இயற்கை அமைப்பும், தட்பவெப்ப நிலையும், அங்கே காணப்படும் நீர்வளமும் முக்கியக் காரணிகளாக அமைகின்றன. இவற்றின் அடிப்படையில்தான் வரலாறும் பண்பாட்டு வளர்ச்சிகளும் அமைந்தன என்றும் சொல்லலாம். தமிழகத்தில், பழைய கற்காலம் முதல் வரலாற்றுக் காலம் வரை மக்கள் தங்களது வாழ்க்கையைத் தொடர்ச்சியாக நடத்தியுள்ளனர். பலகாலமாக, அவர்களது வாழ்க்கை முறைகளும், சமுதாய இயல்புகளும் தனிச் சிறப்புடன் இருந்தன என்றால், அதற்குப் பெருந்துணையாக இருந்தது பழந்தமிழர் நாட்டின் இயற்கை வளம்தான்.*10

தமிழக நிலவியல் கூறுகள்

சங்ககாலத் தமிழகம், நிலவியல் கூறுகளின் அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களாகப் பிரிக்கப்பட்டது. நிலவியல் கூறுகளுக்கு ஏற்ப, அந்தந்த பகுதிகளில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், பொருளாதாரம், தொழில்கள் அமைந்திருந்தன. ஒரு நாட்டின் இயற்கை வளமே அந்நாட்டின் சமூக வளர்ச்சிக்கு மூலகாரணமாகத் திகழ்கிறது.*11

குறிஞ்சி – காடும் காடு சார்ந்த இடமும்

முல்லை – மலையும் மலை சார்ந்த இடமும்

மருதம் – வயலும் வயல் சார்ந்த இடமும்

நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடமும்

இதனை,

‘மாயோன் மேய காடுரை யுலகமுஞ்

சேயோன் மேய மைவரை யுலகமுஞ்

வேந்தன் மேய தீம்புனலுலகமும்

வீணன் மேய பெருமண லுலகமும்

முல்லை, குறிஞ்சி, மருத, நெய்தலெனச்

சொல்லிய முறையில் சொல்லவும் படுமே’

என்று தொல்காப்பியச் சூத்திரம் ஒன்று குறிப்பிடுகிறது.*12 சங்ககாலம் தொட்டே, ஐவகை நிலவியல் கூறுகளை மக்கள் பகுத்துவைத்துள்ளனர்.

தமிழகம், பூகோள அடிப்படையில் தக்காண பீடபூமியில் இருந்து தனித்துக் காணப்படுகிறது. அதற்குக் காரணம், தமிழகத்தைச் சுற்றி அமைந்துள்ள மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர்கள்தான். இவைதான், தமிழகத்தின் இயற்கை அரண்களாக அமைந்துள்ளன.*13

இயற்கை வளங்கள்

தமிழகத்தின் இயற்கை வளங்களாக அமைந்தவை, மலைகளும் ஆறுகளும் ஆகும். ஆற்றங்கரைகளில்தான் பல நாகரிகங்கள் தோன்றி செழிப்புற்று திகழ்ந்துள்ளன. அதன் அடிப்படையில், தமிழகத்தில் காணப்படும் ஆறுகளையும் மலைகளையும், அவை அமைந்துள்ள விதத்தையும் பார்ப்போம்.

அ. மலைகள்

தமிழகத்தில் காணப்படும் மலைகளில் குறிப்பிடத்தக்கது ஜவ்வாது மலை, சேர்வராயன் மலை, பச்சைமலை, கொல்லிமலை போன்றவை ஆகும். ஜவ்வாது மலை, சுமார் 912 மீட்டர் உயரம் உள்ளது.*14 வேலுர் மாவட்டத்தில் ஆம்பூர் அருகே தொடங்கி, சேலம், தர்மபுரி வரை செல்கிறது.

கல்வராயன் மலை, சேலம், தர்மபுரி, கடலூர் மாவட்டங்களை இணைத்துச் செல்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சமலை, 990 மீட்டர் உயரம் உள்ளது. அடுத்து, கொல்லிமலை. இது நாமக்கல், சேலம் மாவட்டங்களை இணைத்துச் செல்கிறது. இதன் உயரம் சுமார் 1219 மீட்டர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.*15 பச்சைமலை, சேலம், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களை இணைத்துச் செல்கிறது. இதன் உயரம் 760 மீட்டர்.

ஆ. ஆறுகள்

பண்பாட்டின் பிறப்பிடம் ஆற்றங்கரைகள்தான். அதன் அடிப்படையில், தமிழக வளர்ச்சிக்கும், சமுதாய மாற்றத்துக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், வணிகப் பெருக்கத்துக்கும் வித்திட்டவை ஆற்றங்கரைகளே. தமிழகத்தைப் பொறுத்தவரை, அத்தகைய இயற்கை தந்த அரிய செல்வமாக விளங்குவது காவிரி ஆறு. கர்நாடக மாநிலத்தில் கூர்க் பகுதியில் உள்ள பிரம்மகிரி என்னும் மலையில் இருந்து தோன்றி, தமிழகத்தில் ஓடி காவிரிப்பூம்பட்டினத்தை அடைந்து, வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. காவிரிப்பூம்பட்டினம், சங்ககாலச் சோழர்களின் தலைநகரமாகவும், சிறந்த துறைமுகப்பட்டினமாகவும் திகழ்ந்தது.

காவிரி ஆறு நீண்ட தொலைவு பயணம் செய்யும் நெடிய ஆறு.*17 இக்காவிரி ஆற்றோடு, ஈரோட்டில் பவானி ஆறும், கரூரில் அமராவதி ஆறும் கலக்கின்றன. நெய்க்குப்பம் பகுதியில் வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் உற்பத்தி ஆகும் நொய்யல் ஆறும் காவிரியோடு கலக்கிறது. காவிரியானது திருச்சி அருகே, கொள்ளிடமாகவும் காவிரியாகவும் பிரிந்து, கரிகாலன் கட்டிய கல்லணையில் மீண்டும் ஒன்றாகிறது. இந்தக் கல்லணையில் இருந்து வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, குடமுருட்டி, காவிரி என ஐந்து நதிகளாகப் பிரிந்து, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் வழியாக ஓடி, அந்த மாவட்டங்களை செழிப்பான பூமியாக மாற்றி கடைசியாகக் கடலில் சென்று கலக்கின்றன.*18

சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, பச்சை மலை ஆகியவற்றின் சரிவுகளில் உருவாகும் அருவிகள், கீழே வரும்போது வெள்ளாறாக மாறுகின்றன. இந்த வெள்ளாறு, பரங்கிப்பேட்டை அருகே கடலில் கலக்கிறது. தொண்டை நாட்டில் ஓடும் பாலாறு, கர்நாடக மாநிலம் நந்திதுர்க்கத்தில் உற்பத்தியாகிறது. அது, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓடி, சதுரங்கப்பட்டினம் அருகே கடலில் கலக்கிறது.*19

கர்நாடக மாநிலம், சென்றாயன்பேட்டையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓடி, கடலூர் அருகே கடலில் கலக்கிறது. இது, சின்னாறு, மார்க்கண்டேய நதி, வாணியாறு, சந்தூர் ஆறு, மத்தூர் ஆறு, பர்கூர் ஆறு, பாம்பாறு, பூலாப்பட்டி ஆறு, செம்மாண்டகுப்பம் ஆறு, வஞ்சி ஆறு, அதியன் ஆறு என பல கிளை ஆறுகளாகப் பிரிந்து, பாயும் பகுதிகளை செழிப்பான பகுதியாக மாற்றிவிட்டு கடலில் கலக்கிறது.*20

திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடும் தாமிரபரணி ஆறு, பாண்டியர்களின் துறைமுகப்பட்டினமாக இருந்த கொற்கை அருகே கடலில் கலக்கிறது. மதுரைக்கு வளம் சேர்க்கும் வைகை நதி, ராமநாதபுரம் அருகே ஆற்றங்கரை என்ற பகுதியில் கடலில் கலக்கின்றது.

கொற்றலை ஆறு, வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் உள்ள ஏரியில் உற்பத்தி ஆகி, சென்னை அருகே கடலில் கலக்கிறது. தவிர, வாலாஜாவில் இருந்து வரும் மகேந்திர நதி, தப்பாறு இரண்டும் பொன்னேரி என்ற பெரிய ஏரியில் கலக்கின்றன. முற்காலத்தில், கொற்றலை ஆற்றின் வழியில்தான் பாலாறு பாய்ந்துள்ளது. எனவே, கொற்றலை ஆற்றை பழைய பாலாறு என்று குறிப்பிடுவார்கள். செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில், கொற்றலை ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில்தான், சுமார் 5,00,000 முதல் 2000 ஆண்டுகள் முன்பு வரை பாலாறு ஓடியிருக்கலாம்.*22

ஆரணி ஆறு, பழைய கற்கால மக்கள் வாழ்விடமாக அமைந்த ஒரு பகுதி. இந்த ஆற்றின் கரையில்தான், இந்தியாவிலேயே முதன்முதலில் பழைய கற்காலத்தைச் சார்ந்த மக்கள் வாழ்ந்த இடங்களையும், அவர்கள் பயன்படுத்திய கற்கருவிகளையும் அதிகமாகக் கண்டறியப்பட்ட பகுதிகளான அத்திரம்பாக்கம், பரிக்குளம் போன்ற இடங்கள் அமைந்துள்ளன.

பூண்டிக்கு அருகே உள்ள இந்தப் பகுதி, இந்திய வரலாற்றில் முக்கியமான ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய இடமாகும்.

***

மேற்கோள் எண்நூல் விளக்கம்

1. நா.மு. வேங்கடசாமி – சிலப்பதிகாரம் மூலமும் உரையும், சைவ சித்தாந்தக் கழக வெளியீடு, திருநெல்வேலி

2. கே.கே.பிள்ளை – தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1975, பக். 14

3. மேலது – பக். 16

4. ந.சி.கந்தையா – திராவிட இந்தியா, இன்டர்நேஷனல் லிங்குஸ்டிக் சென்டர், சாத்தூர், 2000, பக். 45

5. மேலது – பக். 14

6. K.S.Ramachandran – Archaeology of South India, Tamil Nadu, Sundeep Prakashan, Delhi, 1980

7. Ibid

8. Ibid

9. Ibid

10. கே.கே.பிள்ளை – தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1975, பக். 14

11. மேலது – பக். 26

12. க. வெள்ளைவாரணர் – தமிழ் இலக்கிய வரலாறு, தொல்காப்பியம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 1978, பக். 128

13. B. Narasimmaiah – Neolothi and Megalithic Cultures in Tamil Nadu, Sundeep Prakashan, Delhi, 1980

14. K.S.Ramachandran – Archaeology of South India, Tamil Nadu, Sundeep Prakashan, Delhi, 1980

15. Ibid

17. Ibid

18. தமிழ்நாட்டு வரலாற்றுக் குழுவினர் – தமிழ்நாட்டு வரலாறு, தொல்பழங்காலம், தமிழ்நாடு அரசு வெளியீடு, 1975, பக் 46 – 48

19. மேலது – பக். 47

20. K.S.Ramachandran – Archaeology of South India, Tamil Nadu, Sundeep Prakashan, Delhi, 1980

22. D.துளசிராமன் – தமிழகத் தொல்பழங்காலமும் பூண்டி அகழ்வைப்பகமும், தமிழ்நாடு அரசு, தொல்லியல் துறை, 2005

-http://www.dinamani.com

TAGS: