நேற்று அதிகாலை அடித்து கொல்லப்பட்ட ஈழத்தமிழர் மோகனின் உடலை உடற்கூறாய்வு செய்தும், மற்றும் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் இருதரப்பில் விசாரணைக்குப் பின்னர் உடலை ஒப்படைப்பதுமாக காவல்துறை சொல்லி இருந்தது. இதனால் காலை 9 மணியளவில் தோழர்கள் ராயப்பேட்டை பிணவரையில் காத்திருந்த பின்னர் 12 மணிவரை மாஜிஸ்ட்ரேட் வருவதற்கான அறிகுறி இல்லாத நிலையில் அனைத்து தோழர்களும் சாலை மறியலில் ஈடுபட்டோம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர் வன்னியரசு, தமிழகவாழ்வுரிமை கட்சி தோழர் வேணுகோபால், டேவிட் பெரியார், மதிமுகவின் அம்பிகாபதி, தமிழர் எழுச்சி இயக்கத்தின் தோழர் வேலுமணி, தபெதிக தோழர் குமரன், திவிக தோழர்கள் தபசிக்குமரன், உமாபதி, அருண், த.ஓவி இயக்கத் தோழர் பாவேந்தன் உள்ளிட்டவர்கள் அமர்ந்து போராடிய பின்னர் மாஜிஸ்ட்ரேட் வருவதை உறுதி செய்தது காவல்துறை.
மாஜிஸ்ட்ரேட் முன்பு பள்ளிக்கரணை காவல்துறை ஆய்வாளர் மீது கொலைக்குற்றச்சாட்டை பதிவு செய்யப்பட்டது. இந்த அதிகாரி மீது ஏற்கனவே கொலைவழக்கு பதிவுச்செய்யப்பட்ட வரலாற்றினையும் தோழர்கள் மாஜிஸ்ட்ரேட் முன்பு பதிவு செய்தார்கள். இவர் தொடர்ந்து அப்பாவி மக்கள் மீது கடுமையான வழக்கு பதிவு செய்வதும், மிகச்சிறிய குற்றங்களுக்கு கூட கடுமையாக தாக்கி காயப்படுத்தும் பழக்கமுள்ளவர் என பல இயக்கத்தினை/கட்சியை சார்ந்த தோழர்கள் பதிவு செய்திருந்தார்கள்.
பின்னர் உடலை மோகனது குடும்பத்தினர் அல்லாதவர்களிடத்தில் ஒப்படைத்து கொலைவழக்கினை பதிவு செய்யாமல் அல்லது அதற்குரிய பிரிவில் விசாரணை நிகழாமல் செய்ய நடந்த முயற்சிகளை கண்டு மாலை மீண்டும் அனைவரும் ஒன்றாக போராட்டமும், காவல்துறைக்கு எதிராக திரண்டு நிற்க இரண்டு மணி நேரம் இந்நிலை தொடர்ந்தது. எஸ்டிபிஐ. கட்சி தோழர்களும் மாலையில் போராட்டத்தில் இணைந்தார்கள்.
இக்காவல்துறை அதிகாரி இதுபோன்று தொடர்ந்து செய்யும் கொலைகார தாக்குதலையும், காவல்துறை பொதுவாக அத்துமீறுவதையும் , ஈழத்தமிழர்களை சித்திரவதை செய்வதையும் தடுக்கவேண்டுமென்ற நோக்கில் அனைவரும் பிணவரையை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க ஆரம்பித்த பின்னர் மாலை 7 மணிக்கு பின்னர் காவல்துறை மோகனின் உடலை அவரது ரத்த உறவு கொண்டவரிடத்தில் ஒப்படைப்பதாக வாக்குறுதி கொடுத்தது.
ஆனால் தொடர்ந்து தாமதப்படுத்தி இயக்க/கட்சி தோழர்கள் வெளியேறியபின்னர் தனது நோக்கத்தினை நிறைவேற்ற முயன்ற பொழுது மறுபடியும் ஒன்று திரண்டு நாளை காலை அனைத்து கட்சி தலைவர்கள் முன்னிலையில் உடலை பெற்றுக்கொண்டு ஊர்வலமாக செல்வதென்றும், காவல்துறை அதிகாரி கைது செய்யப்படும்வரை மோகனின் உடலை எரிப்பதோ, புதைப்பதோ செய்வதில்லை என்று முடிவெடுத்து பத்திரிக்கையாளர்களிடத்தில் அறிவித்த பின்னர் காவல்துறை பணிந்து மோகனின் உடலை ஒப்படைக்க முன்வந்தது.
இறுதியாக காலையில் முடியவேண்டிய மோகனின் உடல் ஒப்படைப்பு இரவு 8.30 மணிக்கு பின் கடுமையான அழுத்தத்திற்கு பின்னர் உடலை உறவினரிடத்தில் ஒப்படைத்துள்ளது. மோகனின் உடலில் காயங்களும், எழும்பு முறிவும் இருப்பதை தோழர்கள் பார்த்திருக்கிறார்கள். நியாயம் கிடைக்குமா என்பதை அறிக்கை வந்த பின்னரே உறுதி செய்ய இயலும். இந்தியாவில் தமிழகம் காவல்துறை அலுவலக லாக்கப் மரணத்தில் இரண்டாமிடம் வகிக்கிறது என்கிற உண்மையை இந்நிகழ்வு மீண்டும் உறுதி படுத்துகிறது.
-மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி-
-http://www.pathivu.com