உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்திகளில் இந்தியாவும் ஒன்றாகும் என சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைவரான கிறிஸ்டின் லகார்டே தெரிவித்தார்.
ஜி20 அமைப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் கலந்துகொண்ட மாநாடு, துருக்கி தலைநகர் அங்காரா நகரில் நடைபெற்றது. சனிக்கிழமை நிறைவடைந்த இந்த மாநாட்டில் சர்வதேச அளவில் நிதி சார்ந்த கொள்கைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில், சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்டேவும் கலந்துகொண்டார். அப்போது, அவர் கூறியதாவது:
வளரும் நாடுகளில் மட்டுமல்லாது, வளர்ச்சியடைந்த நாடுகளிலும் பொருளாதார ரீதியிலான சவால்கள் காணப்படுகின்றன. சீனாவில், தற்போது பொருளாதாரம் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. வளரும் நாடுகளைப் பொருத்தவரை, இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது. உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்திகளில் இந்தியாவுக்கும் இடமுண்டு என்றார் கிறிஸ்டின் லகார்டே.
சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை காணப்படும் சூழ்நிலையில், சில நாடுகள் தங்களுடைய செலாவணியின் மதிப்பைக் குறைக்கின்றன. இது, பொருளாதார ரீதியில் ஸ்திரமற்றதன்மைக்கு வழிவகுக்கும் என்று அந்த மாநாட்டில் இந்தியா தெரிவித்தது.
-http://www.dinamani.com