மீண்டும் சகாயத்திற்கு கொலை மிரட்டல்… ஆவணங்களையும் அழிக்க சதி… போலீஸ் கூடுதல் பாதுகாப்பு

sagayam-dமதுரை: மதுரை கிரானைட் முறைகேடுகளை விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது. அவரது குழு தயாரிக்கும் கிரானைட் முறைகேடுகள் தொடர்பான அறிக்கையையும் எரிக்கப் போவதாகவும் மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி, மதுரை கிரானைட் குவாரி முறைகேடுகள் குறித்த 20வது கட்ட விசாரணையில் சகாயம் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியில் அவரது குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், வருமான வரித்துறை, சுற்றுச் சூழல் துறை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தியபோது, ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் பெறப்பட்டன.

வரும் 15ஆம் தேதி அன்று இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் தவறுகள் உள்ளனவா என்று சகாயம் ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மதுரை போலீஸ் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு மர்ம அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், ‘கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, சகாயம் தயாரிக்கும் அறிக்கையை அழித்து விடுவோம்; அவரையும் அழித்து விடுவோம்; அவரால் ஒன்றும் செய்ய முடியாது.

மேலுார் நீதிமன்றத்தில் உள்ள கிரானைட் முறைகேடு ஆவணங்களையும் அழித்து விடுவோம்’ எனக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். இந்த மிரட்டலைத் தொடர்ந்து, கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவுப்படி, மதுரை சர்க்கியூட் ஹவுசில் சகாயம் தங்கியுள்ள அறைக்கு ஒரு எஸ்.ஐ., மற்றும் நான்கு போலீசார் என கூடுதல் பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது.

மேலும், அவரது விசாரணைக் குழுவுக்கும், மேலுார் நீதிமன்றத்திற்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஏனெனில், கிரானைட் முறைகேடு தொடர்பான 283 வழக்குகள் மேலூர் குற்றவியல் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்குகளுக்கான ஆவணங்களும் அங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எனவே, கிரானைட் ஆவணங்களை எரிக்கப் போவதாக வந்த மிரட்டலைத் தொடர்ந்து, 2 எஸ்ஐகள் தலைமையில் 10 போலீசார் மேலூர் கோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே போனில் மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கிரானைட் முறைகேடுகளை விசாரிக்கத் தொடங்கியது முதல் இதுவரை சகாயத்திற்கு ஐந்து முறை கொலை மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முறை சகாயத்தை கொல்லப்போவதாக கமிஷனர் அலுவலகத்துக்கே மிரட்டல் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tamil.oneindia.com

TAGS: