நெல்லூர்: காவலர்களைத் தாக்கினால் செம்மரக் கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என ஆந்திர டிஜிபி ராமுடு எச்சரித்துள்ளார். ஆந்திர மாநிலம் நெல்லூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஆந்திர காவல்துறை டிஜிபி ராமுடு.
அப்போது அவர் கூறியதாவது:- திருமலை, சேஷாசல வனப் பகுதிகள் செம்மரங்கள் நிறைந்தவை. இந்த வனப் பகுதிக்குள் சமூக விரோத கும்பல் அத்துமீறி நுழைந்து செம்மரக் கட்டைகளை வெட்டி வெளிநாடுகளுக்குக் கடத்தி விற்கிறது.
வறுமையில் வாடும் தமிழகத் தொழிலாளர்கள், செம்மரக் கடத்தல் கும்பலின் ஆசை வார்த்தைகளை நம்பி திருமலை, சேஷாசல வனப் பகுதிகளில் செம்மரங்களை வெட்டுவதற்காக வருகின்றனர். அவர்கள், சிறப்புப் படையிடம் சிக்கி தங்களது வாழ்க்கையை வீணாக்கி, சிறையில் கழித்து வருகின்றனர்.
எனவே, கடத்தல் கும்பல், அவர்களது புரோக்கர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி தமிழகத் தொழிலாளர்கள் ஆந்திர வனப் பகுதிக்கு வரவேண்டாம்’ என்றார்.
மேலும், செம்மரக் கடத்தலில் ஈடுபடும் முக்கிய நபர்களில் 90 சதவீதம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஆந்திர காவலர்களைத் தாக்கினால் செம்மரக் கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்’ எனவும் அவர் தெரிவித்தார்.