முல்லைப் பெரியாறில் புதிய அணைக்கு ஆய்வு: கேரளத்துக்கு மத்திய அரசு அளித்த அனுமதியை திரும்பப் பெற்றுக் கொண்டது

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட ஆய்வு நடத்துவதற்கு கடந்த ஆண்டு டிசம்பரில் அளித்த அனுமதியை தேசிய விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற்றுக் கொண்டது. இதனால், புதிய அணை கட்டும் அந்த மாநில அரசின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் இடையிலான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அந்த விவரத்தை மறைத்து புதிய அணைக்கான ஆய்வு நடத்த கேரள அரசு தேசிய விலங்குகள் நல வாரியத்திடம் கடந்த ஆண்டு டிசம்பரில் அனுமதி பெற்றது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விவரம் வாரியத்தின் கவனத்துக்கு மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை மூலம் அண்மையில் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, தனது டிசம்பர் மாத உத்தரவை வாரியம் திரும்பப் பெற்றுக் கொண்டது. இதுதொடர்பாக கேரள அரசுக்கு வாரியம் அண்மையில் அனுப்பியுள்ள கடிதத்தில், “முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது. எனவே, புதிய அணை ஆய்வுக்கு அளித்த அனுமதி திரும்பப் பெறப்படுகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, புதிய அணை விவகாரத்தில் இனி உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவைப் பொருத்தே அணை கட்டுவதற்கான ஆய்வில் கேரள அரசு ஈடுபட முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.

உண்மையை மறைக்க முயற்சி: முன்னதாக, முல்லைப் பெரியாறு அணை மிகவும் பழைமையாகி விட்டதாகக் கூறி அப்பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த அனுமதி கோரி மத்திய வனம், சுற்றுச்சூழல் துறையிடம் கேரள அரசு விண்ணப்பித்திருந்தது.

அதை ஆய்வு செய்த அமைச்சகத்தின் “விளைவுகள் மதிப்பீட்டுக் குழு’ கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி கேரள நீர் வளத் துறை தலைமைப் பொறியாளருக்கு அனுப்பிய கடிதத்தில் “புதிய அணை கட்டுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட கேரள அரசு, தமிழக அரசு இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்பட்டிருந்தால், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த மே 7-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. அத்தகைய சூழலில் கேரள அரசு தன்னிச்சையாக அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விவரத்தையும், உச்ச நீதிமன்றம் கடந்த மே 7-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவையும் தேசிய விலங்குகள் நல வாரியத்தின் கவனத்துக்கு மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை கொண்டு சென்றதன்பேரில், கேரளத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி திரும்பப் பெறப்பட்டுள்ளது.

-http://www.dinamani.com

TAGS: