ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான இணைய யுத்தத்தில் இந்தியாவுடன் கை கோர்க்கும் ரஷ்யா

isis_irakடெல்லி: உலகின் மிக கொடூரமான தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக இந்தியாவுடன் ரஷ்யா கை கோர்க்க இருக்கிறது. உலகின் பெரும்பான்மையான நாடுகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த இயக்கத்தில் இணைந்துள்ள இந்தியர்கள் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடியதாக இருந்தாலும் அந்த இயக்கம் இங்கே பலம்பெற்றுவிட்ட எந்த ஒரு வாய்ப்பையும் கொடுக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக இதர நாடுகளை இணைத்துக் கொள்வது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு உதவுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏற்கனவே உறுதி அளித்திருக்கிறது. தற்போது இந்த பட்டியலில் ரஷ்யாவும் இணைந்துள்ளது.

இந்தியாவும் அமெரிக்காவும் இணையம் வழியேயான ‘ஆன்லைன் ஜிகாத்துக்கு’ எதிராக இணைந்து செயல்படுவதில் முனைப்புகாட்டி வருகிறது. தற்போது நீண்டகால நட்பு நாடான ரஷ்யாவுடன் இந்தியா கை கோர்க்க உள்ளது.

இணையம் வழி தீவிரவாத செயல்களை கண்காணிப்பதற்காக ரஷ்யா ஏற்கனவே தொழில்நுட்ப ரீதியான உதவியை வழங்கியிருக்கிறது. உலகின் சைபர் ராணுவங்களில் ரஷ்யா முன்னணியில் இருக்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணையும் இளைஞர்கள் குறித்த தகவல்களை ரஷ்யாவும் இந்தியாவும் பகிர்ந்து கொள்வதில்லை. அதே நேரத்தில் இணையத்தின் வழியே தீவிரவாத இயக்கங்களுடன் சாட்டிங் செய்யும் இளைஞர்களை இருநாடுகளும் முழுமையாக கண்காணிக்க உள்ளன. இது தொடர்பான தகவல்களை இந்தியாவுக்கு உடனே ரஷ்யா தெரிவித்துவிடும்.

இணையம் வழியே மேற்கொள்ளப்படும் தீவிரவாத செயல்களை ஒரு நாடு மட்டுமே கட்டுப்படுத்திவிட முடியாது. அண்மையில் கூட ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைய முயன்ற இந்தியர்களை அரபு எமிரேட்ஸ் தடுத்து நிறுத்தியிருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக சக்கரவியூக ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. தற்போது ரஷ்யாவும் கை கோர்த்திருப்பது இந்தியாவுக்கு பலம்தான் என்கின்றனர் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்.

TAGS: