அரசு காரின் பதிவு எண் தமிழில் இருந்ததால் சுங்கச் சாவடியில் அனுமதி மறுப்பு

toll-Gate ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம் நடந்தது. இதில் கலந்துகொள்ள சென்னையில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்குனர் சேகர் மற்றும் சேலத்தில் உள்ள மண்டல துணை இயக்குனர் செழியன் ஆகிய இருவரும், செழியனுக்கு தனக்கு அரசு வழங்கிய, “தநா 01 அ 4297′ என்ற எண்ணுள்ள அம்பாசிடர் காரில் வந்தார்.

காரின் முன்புறம் தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சி துறை மண்டல துணை இயக்குனர் என்ற தகவல் பலகையும் இருந்தது. இந்த கார் சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்க சாவடியில், 10 மணியளவில் தடுத்து நிறுத்தப்பட்டது.

சுங்க சாவடி பணியாளர்கள், காருக்கான சுங்க தொகை செலுத்த வேண்டுமென, கார் ஓட்டுனர் சத்தியமூர்த்தியிடம் கூறினர். மண்டல துணை இயக்குனர் தலையிட்டு, “இது அரசு கார் தான். நாங்கள் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஈரோட்டுக்கு செல்லவேண்டும் என்று கூறியுள்ளனர்.

நீங்கள் அரசு அதிகாரி எனில், உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள்’ எனக்கூறி அங்கிருந்த பணியாளர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து, கார் ஓட்டுனரின் அடையாள அட்டை, டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி., புத்தகத்தை காட்டும்படி கூறியுள்ளனர். தமிழில் நம்பர் போர்டு இருந்ததால், இந்த கார் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது. நேரம் ஆவதால் வேறு வழியின்றி, கட்டணம் செலுத்திவிட்டு இரு அதிகாரிகளும் ஈரோடு வந்து சேர்ந்துள்ளனர்.

இதுபற்றி, மண்டல துணை இயக்குனர் செழியன், ஈரோடு டி.ஆர்.ஓ., சதீஷிடம் புகார் தெரிவித்தார்.

தமிழ் வளர்ச்சி துறையின், சேலம் மண்டல துணை இயக்குனர் கட்டுப்பாட்டில், 16 மாவட்டங்கள் உள்ளன. தமிழில் நம்பர் பிளேட் எழுதியதற்காக அரசு கார் தடுத்து நிறுத்தப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

-http://www.nakkheeran.in

TAGS: