புகழ்பெற்ற நடிகர்கள் வேறுமாநிலத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் தமிழக கிராமங்களை தத்தெடுக்க வேண்டும்: கொ.ஜ.க.

prakash-raj-wallpaper01தமிழ் மொழியாலும், தமிழக திரைப்படத்துறையாலும் புகழ்பெற்ற நடிகர்கள் வேறுமாநிலத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், தங்கள் வளர்ச்சிக்கு ஆதாராமாக இருந்த  தமிழக கிராமங்களைத் தத்தெடுக்க முன்வர வேண்டும் என்று கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ் திரையுலகில் புகழ்பெற்று விளங்கும் நடிகர் பிரகாஷ்ராஜ் தெலுங்கானா மாநிலத்தில் மெஹபூப் நகர் என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளார்.அதேபோல நடிகர் மகேஷ் பாபு தெலுங்கானாவிலும், கிரிக்கெட் விளையாட்டு வீரர் டென்டுல்கர் உள்ளிட்டோர் ஆந்திரப் பிரதேசத்திலும் உள்ள கிராமங்களை தத்தெடுத்துள்ளனர். தமிழகத்தில் பல கிராமங்கள் போதிய அடிப்படை வசதிகளான குடிநீர்,சாலைகள்,கழிப்பறைகள் வசதிகளின்றி மிகவும் பின்தங்கியுள்ளன.சாலையின் இருபுறமும் வீடுகளில் கழிப்பறையின்மையால் அசுத்தப்படுத்தப்பட்டு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளன.

அதேபோல பல கிராமங்களில் மதுவினால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டும், தரமான இலவசக்கல்வி மற்றும் மருத்துவ வசதியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.

தமிழக திரைப்படத்துறை ஐம்பது ஆண்டு காலமாக தமிழகத்தின் முதல்வர்களை உருவாக்குகின்ற சக்தியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.மேலும் தமிழக நடிகர்கள் தமிழக கிராமங்களை தத்தெடுத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தரவும்,மது அருந்துவோருக்கு அதிலிருந்து விடுபடவும்,மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு கொடுக்கவும் முன்வர வேண்டும்.ஏனென்றால் தமிழக இளைஞர்கள் திரைப்படத்தின் தாக்கத்தால் பல நடிகர்களுக்கு ரசிகர்களாகவும், அவர்களுக்காக எதையும் செய்யத் தயாராகவும் உள்ளனர்.இந்த இளைஞர்களை கிராமங்களைத் தத்தெடுப்பதன் மூலமாக அவர்களுடைய உழைப்பை நடிகர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழக திரைப்படத்துறையால் உருவாக்கப்பட்ட பல நடிகர்கள் இன்று பாலிவுட் திரையுலகில் புகழ்பெற்று விளங்குகிறார்கள். தமிழ் மொழியாலும், தமிழக திரைப்படத்துறையாலும் புகழ்பெற்ற நடிகர்கள்     வேறுமாநிலத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், தங்கள் வளர்ச்சிக்கு ஆதாராமாக இருந்த  தமிழக கிராமங்களைத் தத்தெடுக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

-http://www.nakkheeran.in

TAGS: