தஞ்சை : காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு வழங்காவிட்டால், மத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரியில் இருந்து தமிழகம் கூடுதல் தண்ணீர் கேட்கவில்லை என்றும், இறுதித் தீர்ப்பின்படி உரிய நீரை மட்டுமே கேட்பதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் முதல்முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
குஜராத் போன்ற மாநிலங்கள் உலக முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளதாகவும், அப்படிப்பட்ட ஒரு முயற்சியின் மூலம் தமிழகம் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக திகழும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் என்றும் தேமுதிக தங்களுடைய கூட்டணியில் இருப்பதாகவும் பொன் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.