கொள்ளையோடு கொலையும்… தோண்டத் தோண்ட எலும்புகள்… மதுரைக்கு வந்த சோதனை!

madurai_prp_001மதுரை: தமிழகத்தையே உலுக்கிய கிரானைட் குவாரி கொள்ளை வழக்கில் தற்போது நரபலி விவகாரம் சேர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே அனுமதியின்றி கிரானைட் கற்களை வெட்டி எடுத்து முறைகேடு செய்ததாக பிஆர்பி நிறுவனத்தின் மீது புகார் கூறப்பட்டது. இந்த விவகாரம் கடந்த 1999ம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது. இது குறித்து ஹைகோர்ட் உத்தரவுப்படி சட்ட ஆணையர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். பல்வேறு கட்ட விசாரணைகளை முடித்துள்ள அவர், தற்போது இறுதிக்கட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இன்னும் ஒரு வார காலத்தில் இது தொடர்பான விசாரணை அறிக்கை சென்னை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, பிஆர்பி நிறுவனத்தில் 1999ம் ஆண்டு முதல் 2003 வரை டிரைவராக பணியாற்றிய சேவற்கொடியான் என்பவர் சகாயத்திடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், பிஆர்பி நிறுவனம் 12 பேரை நரபலி கொடுத்ததாகவும், உண்மையை வெளியில் சொன்னால் தன்னைக் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் சகாயம் குழுவினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அதன்படி, மதுரை மாவட்டம் சின்னமலம்பட்டியில், சேவற்கொடியான் அடையாளம் காட்டிய மணிமுத்தாறு மயானத்தில் நரபலி கொடுக்கப்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் தோண்டும் பணி நடந்து வருகிறது.

இன்று காலை 9 மணியளவில் இந்தப் பணி தொடங்கியது. பல ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட உடல்கள் என்பதால் இயந்திரங்களைக் கொண்டு தோண்டாமல், மனிதர்களைக் கொண்டு தோண்டும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் ஆறு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் நூறுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

தோண்டும் பணியினை சகாயத்தின் விசாரணைக்குழு, காவல்துறை, தடயவியல் துறை, மருத்துவத்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட ஐந்து குழுக்கள் கண்காணித்து வருகின்றன. விசாரணை அதிகாரி சகாயம் தலைமையில் , முன்னாள் ஏ.டி.எஸ்.பி., வேலு, தனி உதவியாளர் ஆல்பர்ட், விசாரணைக்குழு அலுவலர் ராஜாராம், வருவாய்துறை அலுவலர் செந்தில்குமாரி, முது நிலை விஞ்ஞானி தேவசேனாதிபதி, ஏ.டி. எஸ்.பி , மாரியப்பன் டி. எஸ். பி., மங்கலேஸ்வரன், வருவாய் துறை தாசில்தார் கிருஷ்ணன், கனிம வளத்துறை உதவி அலுவலர் ஆறுமுக நயினார், தடயவியல் நிபுணர்கள், மருத்துவ , வருவாய் குழுவினர் மயானத்தில் முகாமிட்டுள்ளனர்.

நரபலி கொடுக்கப்பட்ட உடல்கள் இயந்திரங்கள் உதவியோடு புதைக்கப்பட்டதாக சேவற்கொடியான் கூறியிருப்பதால், அதிக ஆழத்திலேயே அந்த உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும், தற்போது இந்த இடம் மயானமாக உள்ளதால், அங்கு மேலும் பலரது உடல்கள் புதைக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே, தீவிர தடயவியல் சோதனைக்குப் பிறகே மீட்கப்படும் எலும்புக் கூடுகள் நரபலி கொடுக்கப்பட்டவர்களுடையதுதானா என்பது தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு, தற்போது சேவற்கொடியான் அடையாளம் காட்டிய பகுதியில் இருவரது உடல்கள் மட்டுமே புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படியானால், மீதம் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களைக் கண்டுபிடிக்கும் பணியும் போலீசாருக்கு உள்ளது.

அதோடு, நரபலி தரப்பட்டவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. அவர்களைப் பற்றிய தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை. எனவே, கிடைக்கும் எலும்புகளைக் கொண்டு, நரபலி கொடுக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதிலும் சிக்கல் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

நரபலி கொடுக்கப்பட்ட இடத்தில் 2வது மண்டை ஓடு கண்டுபிடிப்பு: பரபரப்பு தகவல்

மதுரை அருகே பிஆர்பி நிறுவனத்தினர் நரபலி கொடுத்ததாகக் கூறப்படும் இடத்தில் 2வது மண்டை ஓடு மற்றும்  பூஜை பொருட்கள் கிடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு:

மலம்பட்டி சுடுகாட்டில் சேவற்கொடியோன் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டிய போது முதலில் 5 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டது.

அவற்றை மருத்துவ குழுவினர் சேகரித்ததோடு, தொடர்ந்து தோண்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

5 அடி தோண்டியபோது, அங்கிருந்து ஒரு மனித மண்டை ஓடு, 2 கால் எலும்புகள், 2 கை எலும்புகள், 2 முழங்கால்கள் மற்றும் 2 சிறிய எலும்புகள் என மொத்தம் 9 எலும்பு துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அங்கு மண்டை ஓட்டுடன் தோண்டப்பட்ட இடத்தில் வெள்ளை நிற வேட்டியும், காவித் துண்டு ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உணவு இடைவேளைக்கு பிறகு தோண்டும் பணி மீண்டும் தொடங்கியது.

அப்போது மேலும் ஒரு மண்டை ஓடு, தொடை எலும்புகள், கால் மற்றும் கை எலும்புகள் என 7 எலும்புகள் வெள்ளை பட்டு வேட்டியில் சுற்றப்பட்ட நிலையில் கிடைத்துள்ளன.

மேலும் அபிஷேக பொருட்கள், மஞ்சள் பூசப்பட்ட தேங்காய் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தோண்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மேலும் பல எலும்பு துண்டுகள் கிடைக்கக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முதல் இணைப்பு:

மதுரை அருகே பிஆர்பி நிறுவனத்தினர் நரபலி கொடுத்ததாகக் கூறப்படும் இடத்தில் இதுவரை 5 எலும்புத் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சட்ட ஆணையர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார்.

இன்னும் இரண்டு நாட்களில் கிராணைட் முறைக்கேட்டின் அறிக்கையை உயர்நீதிமன்றத்திடம் சமர்பிக்க வேண்டும் என்பதால் இறுதிக்கட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில்  பி.ஆர்.பி கிரானைட் குவாரியில் டிரைவராக வேலை பார்த்த கீழவளவை சேர்ந்த சேவற்கொடியோன் என்பவர் சகாயத்திடம் ஒரு புகார் மனு கொடுத்திருந்தார்.

அதில், மேலுார் அடுத்த இ.மலம்பட்டி கிராமம், மணிமுத்தாறு பகுதியில் இருவர் நரபலி கொடுத்து புதைக்கப்பட்டதாக கூறியிருந்தார்.

ஆனால், அந்த இடத்தைத் தோண்ட காவல்துறை ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறப்படுகிறது. எனினும், அந்தக் குறிப்பிட்ட இடத்தை தோண்டி ஆய்வு செய்யும் வரை, அங்கிருந்து நகரப் போவதில்லை என சகாயம் அங்கேயே காவல் இருக்க தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது அந்தப் பகுதியில் தோண்டும் பணி தொடங்கியுள்ளது. இயந்திரம் கொண்டு தோண்டினால் தடயங்கள் அழிக்கப் படும் அபாயம் இருப்பதால், மனிதர்களே தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை அங்கு 5 எலும்புத் துண்டுகள் கிடைத்துள்ளதாகவும், தோண்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

-http://www.newindianews.com

TAGS: