எல்லையில் இடையூறு செய்தால் பதிலடி: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் எச்சரிக்கை

எல்லையில் இடையூறு செய்தால் பதிலடி கொடுப்பதற்கு இந்தியா தயங்காது என்று பாகிஸ்தானுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பாக மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
அண்டை நாடுகளுடன் நல்லுறவு வைத்துக் கொள்ளவே இந்தியா எப்போதும் விரும்புகிறது. அதேபோல, பிற நாடுகளுக்கு இடையூறு செய்யாத வெளியுறவுக் கொள்கையையே இந்தியா தொடர்ந்து கடைப்பிடிக்கிறது.

ஆனால், நம் மீது (இந்தியா மீது) யாராவது முதலில் தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுப்பதற்குத் தயங்க மாட்டோம். யாருக்கும் நாம் இடையூறு அளிக்க மாட்டோம். அதேசமயம், நமக்கு யாராவது இடையூறு அளிக்கும்பட்சத்தில், அவர்களை சும்மா விட மாட்டோம்.

தில்லியில் என்னைச் சந்தித்த பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படை (பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படை) குழுவிடம் காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் நிலையை தெளிவாகத் தெரிவித்துவிட்டேன். காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், பேச்சுவார்த்தை எதுவும் நடத்த வேண்டுமெனில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்துதான் பேச வேண்டும் என்றும் கூறிவிட்டேன்.

இந்திய ராணுவ வீரர்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் ஏன் தாக்குதல் நடத்துகின்றனர்? முதலில் நீங்கள் (பாகிஸ்தான்) தாக்குதல் நடத்தினால், பதிலுக்கு நாங்களும் (இந்தியா) தாக்குதல் நடத்துகிறோம். நமது இரு நாடுகளும் ஒன்றிணைந்து பயங்கரவாதம் எனும் அச்சுறுத்தலுக்கு எதிராக ஏன் தாக்குதல் தொடுக்கக் கூடாது?

நாட்டின் 23,000 கிலோ மீட்டர் தொலைவு எல்லைப் பகுதியைப் பாதுகாப்பது சவாலான விஷயமாகும். இருப்பினும், நமது எல்லைப் பகுதிகள் சிறப்பாகப் பாதுகாக்கப்படுகின்றன.

அமெரிக்கா, சீனாவுக்கு இணையான பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என்று உலக நாடுகள் கணித்துள்ளன. என்னைப் பொருத்த வரையில், அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் நமது நாடானது உலகிலேயே மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், இந்தியா அதுபோன்ற நிலையை அடைவதை சில தேசவிரோத சக்திகள் விரும்பவில்லை.

ராஜதந்திர விவகாரங்களை பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாகக் கையாள்கிறார். அவரது தலைமையால்தான், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுபோன்ற நிலையை ஐக்கிய அரபு அமீரகம் எடுக்கும் என்று முன்பு நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது.

வடகிழக்கு மாநிலங்களில் 70 தீவிரவாதக் குழுக்கள் செயல்படுகின்றன. அவற்றைக் கையாள்வது சவாலான விஷயமாகும். அதேசமயம், தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகாலாந்து அமைப்புடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு, அப்பகுதியில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

நக்ஸலைட் பயங்கரவாதத்தால் நாட்டில் 26 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், மத்திய அரசின் உதவியுடன் நக்ஸலைட்டுகளுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கையை எடுத்து வருகின்றன என்றார் ராஜ்நாத் சிங்.

 “எல்லைகளில் சுற்றுப்பயணம் செய்வதை ஒத்திவைத்தார்’

புது தில்லி, செப்.13: பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளையொட்டிய இந்திய எல்லைப் பகுதிகளில் அடுத்த வாரம் சுற்றுப்பயணம் செய்யும் திட்டத்தை ராஜ்நாத் சிங் ஒத்திவைத்தார்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “பிகாரில் அடுத்த வாரம் பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்கு வசதியாக இந்தப் பயணத்தை ராஜ்நாத் சிங் ஒத்திவைத்திருக்கிறார். இந்த மாதம் இறுதியில் திட்டமிட்ட பகுதிகளுக்கு அவர் செல்வார்’ என்றார்.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளான சம்பாவிலும், சீனாவையொட்டிய சுமரிலும் செவ்வாய்க்கிழமை முதல் 3 நாள்கள் ஆய்வு செய்ய ராஜ்நாத் சிங் திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.dinamani.com

TAGS: