கிரானைட் குவாரிகளில் நரபலிகள்… சுடுகாட்டில் உறங்கிய சகாயம்…

sagayam84-600மதுரை: மதுரை கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் இப்போது தோண்ட தோண்ட வந்து கொண்டிருக்கிறது. ‘கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது’ என்பார்கள். கிரானைட் கொள்ளை குறித்து தோண்டிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு நரபலி பற்றிய பூதம் வெளிப்பட்டுள்ளது. 12 பேர் நரபலி கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில் தற்போது 5 எலும்புக்கூடுகள் வரை கண்டெடுக்கப்பட்டுள்ளது. சகாயம் ஐ.எஸ்.எஸ் அதிகாரிக்கு டுவிட்டரில் ஆதரவு குவிந்து வருகிறது. மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் ஐ.ஏ.எஸ் வெளிக் கொண்டு வந்த 16000 கோடி கிரனைட் குவாரி மோசடி ஒட்டு மொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்தது. இதனையடுத்து அதிரடியாக பணிமாற்றம், அலைக்கழிப்பு, அமைச்சர்களிடம் அவமரியாதை என சகாயம் சந்தித்த இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. சட்டம் சகாயத்தின் பக்கம் இருக்கவே உயர்நீதிமன்றமே கிரானைட் முறைகேடு பற்றி விசாரிக்க சாகயம் தலைமையில் குழுவை நியமித்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி முதல் இதுவரை 19 கட்ட விசாரணைகளை முடித்துள்ள சகாயம், கிரானைட் குவாரிகளில் பலமுறை கள ஆய்வும் நடத்தியுள்ளார். கிரானைட் முறைக்கேட்டின் அறிக்கையை செப்டம்பர் 15ம் தேதி உயர்நீதிமன்றத்திடம் சமர்பிக்க வேண்டும் சகாயம். இதற்காக அறிக்கை தயாரிக்கும் பணியில் குழுவினர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்த விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திடம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சேவற்கொடியோன் என்பவர் மேலுார் அடுத்த இ.மலம்பட்டி கிராமம், மணிமுத்தாறு பகுதியில் இருவர் நரபலி கொடுத்து புதைக்கப்பட்டதாக புகார் செய்தார். நரபலி கொடுக்கப்பட்டது உண்மைதானா என்பதை விசாரணை செய்த சகாயம் சனிக்கிழமையன்று களத்தில் இறங்கினார்.

சகாயம் குழுவினர் சனிக்கிழமையன்று காலை 10:00 மணிக்கு சுடுகாட்டிற்கு வந்தனர். மாவட்ட நிர்வாகதிற்கும், காவல்துறைக்கும் முறைப்படி தகவலை அனுப்பிவிட்டு நரபலி கொடுத்து உடலை புதைத்த மணிமுத்தாறு சுடுகாட்டிற்கு சேவற்க்கொடியானுடன் வந்தார். ஆனால், சம்பவ இடத்தை தோண்டி, சடலத்தை வெளியே எடுக்க போலீசார் ஒத்துழைக்கவில்லை. மாலை 6 மணி ஆனபோதிலும், போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

மாவட்ட நிர்வாகத்தினர், தாசில்தார் கிருஷ்ணண், ஆர்.டி.ஓ. செந்தில் குமாரி உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும் பல்வேறு வேலைகளை கொடுத்து சம்பவ இடத்தில் இருந்து போகச் சொல்லிவிட்டனர். அதேபோல், பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவக்குழுவையும சம்பவ இடத்திற்க்கு அனுப்பாமல் இழுத்தடித்து.

மதுரையில் இருந்து சென்ற 5 பேர் கொண்ட மருத்துவக்குழுவை, நான்கு மணி நேரமாக மேலூர் காவல் நிலையத்தில் உட்கார வைத்து மாலை ஆறு மணிக்கு மேல் மலம்பட்டிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் சம்பவ இடதிற்க்கு சென்ற மருத்துவக்குழுவினர், சூரியன் மறைந்துவிட்டதால் இனி பிரேத பரிசோதனை செய்ய முடியாது. அதனால் பிணத்தை தொண்ட வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டனர்.

எனினும் அசராத சகாயம் குழுவினர் இரவு எத்தனை மணி நேரமானலும், புகாரில் குறிப்பிட்ட இடத்தை தோண்டி எடுத்து உடலை ஆய்வு செய்த பிறகே இங்கிருந்து செல்வோம் எனக் கூறி சுடுகாட்டிலேயே முகாமிட்டனர். கீழே அட்டை, பேப்பர் போன்றவற்றை போட்டு அதில் சகாயம் அமரவே, பின்னர் உள்ளூர்வாசிகள் கட்டில் ஏற்பாடு செய்தனர்.

அந்த சுடுக்காட்டில் மின்சார வசதி இல்லாமல் இருப்பதால், மாவட்ட நிர்வாகத்திடம் ஜெனரேட்டர் வசதி செய்து கொடுக்க சொல்லி கேட்டார். ஆனால், மாவட்ட நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. அதனால், அதிகாரி சகாயத்திற்கு ஜெனரேட்டர் வசதி செய்து கொடுக்க பொது மக்கள் மேலூரில் இருந்து ஜெனரேட்டர் ஒன்றும் அதனை ஆப்ரேட்டிங் செய்ய ஆப்ரேட்டர் ஒருவரையும் மினி லாரியில் அழைத்து வந்தனர். ஆனால், வரும் வழியில் அந்த ஜெனரேட்டர் ஆபரேட்டரை மேலுர் காவல் உதவி ஆய்வாளர் அய்யனார் போகவிடாமல் தடுத்து அழைத்து சென்றதோடு, ஜெனரேட்டரில் இருந்த முக்கிய பாகம் ஒன்றையும் கழட்டி எடுத்து சென்றனர்.

உணவை கூட சுடுகாட்டிற்கே வரவழைத்து உண்ட சகாயம் இரவு முழுவதும் பெட்ரோமாக்ஸ் லைட் உதவியுடன் கயிற்று கட்டிலில் சுடுகாட்டிலேயே படுத்து கிடந்தார். இதையடுத்து, இரவு 7 மணிக்கு மதுரை மாவட்ட எஸ்பி விஜயேந்திரபிதாரி மயானத்துக்கு வந்தார். அவரிடம், போலீஸார் தனக்கு ஒத்துழைக்கவில்லை என சகாயம் பகிரங்கமாக புகார் தெரிவித்தார். அதற்கு எஸ்பியோ, இப்போது இருட்டிவிட்டது, காலையில் தோண்டலாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார். இதனையடுத்து மருத்துவக்குழுவினர், போலீஸார் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

 

இங்கிருந்து சென்றுவிட்டால் இரவோடு இரவாக மயானத்தை தோண்டி சடலங்களை எடுத்துச் சென்று விடுவார்கள் என நினைத்த சகாயமும், அவரது குழுவினரும் மயானத்தை விட்டு செல்லாமல் அங்கேயே இருந்து விட்டனர்.

இங்கிருந்து சென்றுவிட்டால் இரவோடு இரவாக மயானத்தை தோண்டி சடலங்களை எடுத்துச் சென்று விடுவார்கள் என நினைத்த சகாயமும், அவரது குழுவினரும் மயானத்தை விட்டு செல்லாமல் அங்கேயே இருந்து விட்டனர்.

இந்நிலையில், மயானத்தில் எவ்வித பாதுகாப்பு இல்லாமல் சகாயம் குழுவினர் இருக்கும் தகவல் பரவியதால் பலர் சகாயத்தை தேடி வரத் தொடங்கினர். இரவு 1 மணிக்கு ஆம் ஆத்மி, சட்டப் பஞ்சாயத்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மயானத்துக்கு வந்தனர். தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்களும் சகாயத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

சுடுகாட்டில் சகாயம் உறங்கிய சம்பவம் தீயாக பரவவே சகாயத்திற்கு ஆதரவு பெருகியது டுவிட்டரில் #StandWithSagayam என்று ஹேஸ்டேக் பதிவிட்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.

கதாநாயகர்களையும் கற்பனைக் கதைகளையும் விடுத்து சகாயம் போன்ற நிஜ நாயகர்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் என்று பதிவிட்டனர் சிலர்.

ஒருவழியாக ஞாயிறன்று காலையில் மலம்பட்டி சுடுகாட்டில் ஆர்.டி.ஓ. செந்தில் குமாரி, சட்ட ஆணையர் சகாயம் குழுவினர் முன்னிலையில், தோண்டப்பட்டது. பொக்லைன் உதவியுடன் அந்த இடத்தில் தோண்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் அப்படி தோண்டும் போது சில தடையங்கள் அழிக்கப்படக்கூடும் என்பதால் மனிதர்களின் உதவியோடு தோண்டப்பட்டது.

 

அதன்படி, சுடுகாட்டில் சேவற்கொடியோன் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டிய போது எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றைஆம்புலன்ஸில் மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மாலை 5 மணியளவில் சகாயம் குழுவினர் சின்ன மலம்பட்டியில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.

 

புகார் கொடுத்த சேவஸ்கொடியோன், 1999 முதல் 2003 வரை பி.ஆர்.பி., நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்தேன். அப்போது மேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து சாப்பாடு கொடுத்தனர். வேலை பார்த்த காலங்களில் 11 ஆண்கள் மற்றும் ஒரு பெண்னை அழைத்து வந்துள்ளேன். இ.மலம்பட்டி குவாரியில் பழுதான ஆயில் மோட்டாரை எடுத்து கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பு கம்பெனி நோக்கி ஜோதிபாசு என்பவருடன் சென்றேன். எதிரில் மற்றொரு வண்டியில் மேலாளர் அய்யப்பன் சென்றார். அதில் பார்த்த போது நான் அழைத்து வந்ததில் இருவர் கழுத்தறுபட்டு இறந்து கிடந்தனர். இதனால் ஜோதிபாசு என்னை சத்தமிட்டார். இ.மலம்பட்டி அருகே மணல் அள்ளும் இயந்திரத்தை கொண்டு குழி தோண்டி இருவரையும் புதைத்தனர். மேலாளர் அய்யப்பனிடம் சம்பவத்தை நான் பார்த்ததாக ஜோதிபாசு கூறினார். இதனால் என்னையும் அய்யப்பன் மிரட்டினார், என்றார். இனி எத்தனை சடலங்கள் சிக்கப்போகிறதோ? மிரண்டு கிடக்கிறது மதுரை…

TAGS: