செம்மரம் கடத்தி ரூ.600 கோடி சொத்து சேர்த்த ராஜூபாய்: மும்பையில் கைது

semmaramமும்பை: செம்மரக் கடத்தலில் தொடர்புடைய மும்பை முக்கிய புள்ளி ராஜூபாய் என்பவரை சித்தூர் போலீஸார் மும்பையில் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1,000 டன் செம்மரம் கடத்தியுள்ள ராஜூபாய் ரூ. 600 கோடி சொத்து சேர்த்துள்ளதாக போலீஸார் திடுக்கிடும் தகவவ்களைத் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி, அதனை வெளிநாடுகளுக்கு கடத்துவதில் மும்பையைச் சேர்ந்த ஜித்தேந்திரா மோகன்லால் என்கிற ராஜுபாய்க்கு (39) முக்கிய பங்கு உள்ளது.

குஜராத்தில் பிறந்த ராஜுபாய், பிழைப்பு தேடி சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் மும்பை சென்றுள்ளார். பின்னர் வெங்காயம் மொத்த வியாபாரம் செய்து வந்த இவருக்கு சென்னையைச் சேர்ந்த செம்மர வியாபாரிகள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து ஒரு டன்னுக்கு ரூ. 10 லட்சம் என பேரம் பேசி இவர் செம்மரங்களை கடத்தி வந்துள்ளார். செம்மரங்களை கன்டெய்னர்களில் கடத்துவதில் ராஜுபாய் கில்லாடி என்றும் வழியில் பல கன்டெய்னர்களுக்கு மாற்றி, இவர் செம்மரம் கடத்துவார் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதுவரை சுமார் 1,000 டன் செம்மரங்களை வெளிநாடுகளுக்கு கடத்தியுள்ளதாக கூறப்படும் ராஜு பாய் மீது சித்தூர் மாவட்டத்தில் மட்டும் 13 வழக்குகள் உள்ளன. இதையடுத்து அவரை கைது செய்ய சித்தூர் மாவட்டம் மதனபல்லி போலீஸார் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மும்பை சென்றனர். மும்பை சென்ற போலீஸார், ராஜுபாயை உடனடியாக கைது செய்யாமல், அவர் செல்லும் இடங்களையும், அவருக்குள்ள நட்பு வட்டத்தையும் உளவு பார்த்துள்ளனர்.

பின்னர் அவரை மும்பை, வஷி நகரில் சுற்றிவளைத்து கைதுசெய்து நேற்று சித்தூருக்கு அழைத்து வந்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 டன் செம்மரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

செம்மரக் கடத்தல் மூலம் ராஜூ பாய் இதுவரை சுமார் ரூ. 600 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் இந்த சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சித்தூர் எஸ்பி ஸ்ரீநிவாசராவ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். செம்மரக்கடத்தல் வழக்கில் மும்பை தாதா ராஜூபாய் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tamil.oneindia.com

TAGS: