மராத்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே மும்பையில் ஆட்டோ பெர்மிட்! அரசு முடிவால் தொழிலாளர்கள் ஷாக்

marathiமும்பை: மராத்தி மொழி பேச தெரிந்தவர்களுக்கு மட்டுமே ஆட்டோ ஓட்ட பெர்மிட் வழங்கப்படும் என்று அமைச்சர் திவாகர் ராவ்தே கூறினார். மகாராஷ்டிராவில், பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. அம்மாநிலத்தில் சமீபத்தில் மாட்டிறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டதும், குறிப்பிட்ட நாட்களுக்கு தொடர்ச்சியாக இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டதும் சர்ச்சையை உருவாக்கியிருந்தது.

இந்நிலையில் மற்றொரு சர்ச்சையை உருவாக்கியுள்ளார் அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் திவாகர் ராவ்தே. அவர் நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:

மும்பையில் ஆட்டோ ஓட்ட பெர்மிட் வழங்குமாறு ஏற்கனவே ஒரு லட்சம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. இதில், மராத்தி பேசும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பெர்மிட் வழங்கப்படும்.

இதற்காக, தாங்கள் குறைந்தது 15 ஆண்டுகள் மராட்டியத்தில் வசிக்கிறோம் என்பதை உறுதிபடுத்தும் விதத்தில், இருப்பிட சான்றிதழை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். புதிய ஆட்டோ பெர்மிட்கள் நவம்பர் மாதத்துக்குள் வினியோகிக்கப்படும்.

அதற்குள் விண்ணப்பதாரர்கள் இருப்பிட சான்றிதழை தாக்கல் செய்திருக்க வேண்டும். அவர்கள் மராத்தி மொழி பேசத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். மராத்தி தெரியாதவர்களுக்கு பெர்மிட் வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு அமைச்சர் திவாகர் ராவ்தே தெரிவித்தார்.

அவரது இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகளும், அரசு அதிகாரிகள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘அரசின் இந்த முடிவு ஏறத்தாழ இறைச்சி தடை போன்றது தான். இதுபோன்ற விதிமுறை நடைமுறையில் இருப்பது உண்மை தான். ஆனாலும், மிகவும் அரிதாகவே பின்பற்றப்படுகிறது” என்றார்.

மும்பை மண்டல காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் கூறுகையில், ‘‘மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு இது மாநில அரசால் அரசியல் உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முடிவு. இதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திரும்ப பெற வேண்டும்” என்றார்.

இதேபோல், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. மும்பையில் 70 சதவீத ஆட்டோ டிரைவர்கள் மராத்தியர்கள் அல்லாதவர்கள் என தெரியவந்துள்ளது. எனவே, மண்ணின் மைந்தர்களை தூக்கிவிடுவதாக நினைத்துக்கொண்டு, இதுபோன்ற ஒரு முடிவை மகாராஷ்டிர அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது.

tamil.oneindia.com

TAGS: