கோமியம் கிருமி நாசினியா? மருத்துவமனையில் தெளித்து சோதித்து பார்க்கிறது ராஜஸ்தான் அரசு

cow-urine34ஜெய்ப்பூர்: பசுவின் கோமியத்திற்கு கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதாக கூறப்பட்டுவரும் நிலையில் அதை நிரூபித்து பார்ப்பதற்காக, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில், கோமியத்தை தெளித்து பரிசோதிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்துக்கள் வாழ்க்கை முறையில் பசுக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துவருகின்றனர். பசு மாட்டின் பல்வேறு உதிரி பொருட்களை தங்கள் வாழ்க்கையின் பல்வேறு பயன்பாடுகளுக்கு எடுத்துக்கொள்கிறார்கள். வீட்டு முற்றத்தை சாணத்தால் தெளிப்பது, கோமியத்தை வீட்டில் தெளிப்பது போன்ற நடைமுறைகள் அதில் சில.

பசுஞ்சாணம் மற்றும் கோமியம் ஒரு கிருமி நாசினி, என்ற கருத்தாக்கம் இந்துக்கள் மத்தியில் நெடுங்காலமாக உள்ளது. இதை அறிவியல் பூர்வமாக சோதித்து பார்க்க ராஜஸ்தான் மாநில அரசு முடிவுக்கு வந்துள்ளது.

இதன் ஒருகட்டமாக, ஜெய்ப்பூர் தலைமை அரசு மருத்துவமனையின், தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பின் நோயாளிகள் தங்க வைக்கப்படும் வார்டுகளில், கோமியத்தை தெளித்து, நோய் கிருமிகள் அழிகின்றனவா என, சோதனை நடத்தப்படுகிறது. வழக்கமாக பினாயில் அல்லது டெட்டால் போன்ற செயற்கை பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படும் நிலையில் இப்போது கோமியம் தெளிக்கப்படுகிறது.

ஜெய்ப்பூர் அரசு தலைமை மருத்துவமனை டாக்டர்களுக்கு அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதையடுத்து, அடுத்த வாரம் அரசுக்கு அளிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில், மருத்துவமனை கிருமிநாசினியாக கோமியம் பயன்படுத்தப்படுமா என்பது தெரிய வரும் என, அரசு தெரிவித்துள்ளது.

tamil.oneindia.com

TAGS: