நேதாஜி தொடர்பான 12,000 பக்க ரகசிய ஆவணங்களை வெளியிட்டது மேற்கு வங்க அரசு! – மம்தா அதிரடி

Netaji_Subhas_Chandra_Boseகொல்கத்தா: இந்திய விடுதலைக்குப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான ஆவணங்களை மேற்குவங்க அரசு இன்று வெளியிட்டது.

மொத்தம் 12744 பக்கங்கள் கொண்ட, 64 ஃபைல்களை, கொல்கத்தா போலீஸ் மியூசியத்தில் காவல்துறை காட்சிப்படுத்தியுள்ளது. 1937 முதல் 1947ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான 64 ஆவணங்களை வெளியிடப் போவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

நேதாஜி குறித்த ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு வருவதாகவும், அவை 18ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று நேதாஜி தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்பட்டது.

முன்னதாக, இதற்கான ஏற்பாடுகளை மேற்குவங்க தலைமைச் செயலக அதிகாரிகள் செய்து வந்தனர். நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், மேற்கு வங்க அரசு இந்த ஆவணங்களை வெளியிட்டு உள்ளது.

காலை 10.30 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த கொல்கத்தா போலீஸ் கமிஷனர், சுராஜித் கர் புர்கயாஸ்தா “நேதாஜி தொடர்பாக 64 ஆவணங்கள் கொல்கத்தா போலீஸ் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் பொதுமக்கள் பார்வைக்காக அவை காட்சிப்படுத்தப்படும். இந்த ஆவணங்கள் மொத்தம் 12744 பக்கங்கள் கொண்டது” என்று தெரிவித்தார்.

நீண்ட வரிசையில் காத்திருக்கும், பத்திரிகையாளர்களும், பொதுமக்களும், மியூசியத்திலுள்ள ஆவணங்களை படித்து வருகிறார்கள்.

tamil.oneindia.com

TAGS: