மதுரை: கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுத்து உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் மேலும் இரண்டு எலும்புக்கூடு இருப்பதை சகாயம் குழு கண்டுபிடித்துள்ளனர். தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள் கிடைத்து வருவதால் நரபலி புகார் வழக்கு மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
மதுரையில் கிரானைட் முறைகேடுகளை விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழுவிடம் கீழவளவு பகுதியைச் சேர்ந்த சேவற்கொடியோன் என்பவர் கடந்த ஆண்டு புகார் அளித்தார். அதில், கிரானைட் உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமியிடம் டிரைவராக வேலை செய்த போது அப்போது, புதுக்கோட்டை அன்னவாசலை சேர்ந்த மனநலம் பாதித்த சிலரை குவாரிக்கு அழைத்து வந்ததாகவும், அதில் இருவரை நரபலி கொடுத்து, சின்னமலம்பட்டி மணிமுத்தாறு மயானத்தில் புதைத்ததாகவும், தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து, மேலூர் அடுத்த சின்னமலம்பட்டியில் உள்ள சுடுகாட்டில் உள்ள பகுதியில், கடந்த 13ஆம் தேதி 5 அடி அளவிற்கு குழி தோண்டப்பட்டது. அப்போது, 4 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில், 10 அடி ஆழம் வரை தோண்டும் பணி துவங்கியது. 3ணி அளவில், 4.5 அடி ஆழம் தோண்டியபோது, பட்டு வேட்டி சுற்றப்பட்ட நிலையில், ஒரு மனித எலும்பு கூடு கிடைத்தது. அதனருகே, தேங்காய், பாக்கு ஆகிய பொருட்கள் கிடந்தன.
மாலை 5 மணிக்கு, மீண்டும் ஒரு எலும்பு கூடு தோண்டி எடுக்கப்பட்டது. இவ்விரு எலும்பு கூடுகளையும் பிளாஸ்டிக் கேன்களில் வைத்து, மருத்துவ குழுவினர் மதுரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.நேற்று மாலை வரை, 5.5 அடி மட்டுமே தோண்டப்பட்டதால், இன்றும் தொடர்ந்து குழி தோண்டும் பணி நடக்க உள்ளது.தோண்ட, தோண்ட எலும்பு கூடுகள் கிடைத்து வருவது, அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதால், இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
நரபலி பற்றி புகார் கொடுத்த சேவற்கொடியோன், ‘‘ஒடிசா, பீகார், ஆந்திரா என்று பல்வேறு இடங்களில் இருந்து இங்கு வேலைக்கு வந்து இறந்தவர்களின் நிலைமை நமக்குத் தெரியாது. அவர்களில் பலபேர் மர்மமான முறையில் இறந்துபோனார்கள். அவர்கள் சடலங்கள் எங்கே? அவர்களை வேலைக்குக் கூப்பிட்டு வந்த கங்காணிகளிடம் விசாரணை நடத்த வேண்டும். அவர்கள் ஜே.சி.பி-யை வைத்து தோண்டிப் புதைத்தனர்.
மனிதர்களை வைத்துத் தோண்டியது வெறும் ஐந்து அடிகள்தான். நரபலி கொடுத்த உடல்களை எல்லாம் இன்னமும் 10 அடிகள் தோண்டினால்தான் எடுக்க முடியும். நரபலியை மேலும் மேலும் மூடி மறைக்க காவல் துறையினரும் மாவட்ட நிர்வாகத்தினரும் வேலைசெய்து வருகின்றனர்.
ஏற்கெனவே பல்வேறு இடங்களுக்கு இதுபற்றி புகார்கள் அனுப்பி இருக்கிறேன். ஐ.நா சபையின் மனித உரிமைகள் அமைப்புக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து எம்.பி-க்களின் இ-மெயில்களுக்கும் நரபலி புகார்கள் பல்வேறு தரப்பில் இருந்தும் அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கைகள் இப்போதுதான் நடக்கின்றன. அதுவும் மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். எனக்குப் பல்வேறு வழிகளில் இருந்து மிரட்டல்கள் வருகின்றன என்று கூறியுள்ளார்.
வருவாய் துறை கிராம பதிவேடுகளில், இந்த இடம் சுடுகாடு என குறிப்பிடப்படவில்லை. 10 அடி ஆழம் வரை தோண்டினால் தான், வழக்கிற்குரிய ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறிய சகாயம், வருவாய் துறை மற்றும் போலீசார் இணைந்து, தோண்டும் பணியை துவக்கியுள்ளனர். கிரானைட் முறைகேடு குறித்த விசாரணை அறிக்கை, அக்டோபர் 15ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.