பாகிஸ்தானுடன் காஷ்மீர் ஒருபோதும் இணையாது

பாகிஸ்தானின் அங்கமாக காஷ்மீர் ஒருபோதும் ஆகாது என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.

இதுதொடர்பாக பிரிட்டன் தலைநகர் லண்டனில் “ஜம்மு-காஷ்மீர் தொடர்பான விவாதம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பிரச்னைக்கு, காஷ்மீரே முக்கிய காரணமாகும். இப்பிரச்னைக்கு, போர் தொடர்பாக மிரட்டல் விடுப்பதோ அல்லது அணுஆயுதத்தைப் பயன்படுத்துவோம் என்றோ, எங்களிடம் அணுஆயுதம் உள்ளது என்றோ தெரிவிப்பதன் மூலம் தீர்வு காண முடியாது. காஷ்மீர் பிரச்னை தொடர்பாக புரிந்துணர்வு ஏற்படுவதற்கு இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது அவசியம்.

இந்தப் பிரச்னையில், ஒன்றை மட்டும் என்னால் தெளிவாக தெரிவிக்க முடியும். அதாவது, இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையை யாராலும் மாற்ற முடியாது. எத்தனை நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும், எல்லையை மாற்ற முடியாது.

வான் வழியாக முயற்சித்தாலும், பாகிஸ்தானால் காஷ்மீரை கைப்பற்ற முடியாது. அது ஒருபோதும் நடக்கப் போவதில்லை. இரு பக்கங்களிலும் உயிரிழப்பது இஸ்லாமியர்கள்தான் என்பதை அவர்கள் (பாகிஸ்தான்) ஏன் புரிந்து கொள்ளவில்லை?

பாகிஸ்தான் முதலில் குண்டுவீசுகிறது. பதிலுக்கு அந்நாடு மீது இந்தியா தாக்குதல் நடத்துகிறது. 65 ஆண்டுகளாகவே இது நடக்கிறது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நான் ஒன்று தெரிவிக்கிறேன். இத்துடன் இது நிறுத்தப்பட வேண்டும். இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

பாகிஸ்தானின் அங்கமாக காஷ்மீர் ஒருபோதும் ஆகாது. ஃபரூக் அப்துல்லா வாழ்ந்தாலும் சரி அல்லது இறந்தாலும் சரி, பல நூறு ஆண்டுகள் ஆனாலும் பாகிஸ்தானுடன் காஷ்மீர் இணைவது நடைபெறப் போவதில்லை. இதை புரிந்து கொண்டு இந்தியாவுடன் பாகிஸ்தான் நட்புறவை ஏற்படுத்த வேண்டும். குல்மார்க், பஹல்காமுக்கும், முகலாயர்களின் தோட்டங்களுக்கும் பாகிஸ்தானியர்கள் வர வேண்டும். அதேபோல், இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் நகரங்களில் நான் கார் ஓட்டிச் செல்ல வேண்டும் என விரும்புகிறேன். லாகூரில்தான் எனது தாத்தா, மாமாவின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், என்னால் அங்கு செல்லக் கூட முடியவில்லை. நான் இறந்த பிறகு, எனது ஆன்மா அங்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது.

நாடு பிரிவினையின்போது இரு தரப்பிலும் அப்பாவி மக்கள் ஏராளமானோர் பலியாகினர். அதுபோன்ற பேரிழப்பு மீண்டும் ஏற்படக் கூடாது. அதை தயவு செய்து மறக்க வேண்டும். மீண்டும் எதுவும் நடந்தால், அப்பாவி மக்கள்தான் உயிரிழக்க நேரிடும்.

இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை 4 போர்கள் நடந்துள்ளன. ஆனால், எல்லைக் கோட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நாங்கள்தான் (காஷ்மீர் மக்கள்) தொடர்ந்து துன்பத்துக்கு ஆளாகி வருகிறோம்.

காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்கா எந்த உதவியும் செய்யும் எனத் தெரியவில்லை. ஏனெனில், பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வது போல, இந்தியாவுக்கும் அந்நாடு ஆயுதங்களை விற்பனை செய்கிறது. நமது இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தி வரும் வேளையில், அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து பணம் சம்பாதித்து வருகிறது என்றார் ஃபரூக் அப்துல்லா.

நிகழ்ச்சியில் “ரா’ அமைப்பின் முன்னாள் தலைவர் துலத் பேசுகையில், “பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் முஷாரஃபுடன் பேச்சுவார்த்தை நடத்தி, காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காணும் வாய்ப்பை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இழந்து விட்டார்’ என்றார்.

-http://www.dinamani.com

TAGS: