காவலர்கள் தற்கொலையில் தமிழகம் 2ம் இடம்… அதிகரிக்கும் மனஅழுத்தமே காரணம்

police455-600நாட்டிலேயே மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் போலீஸ் அதிகாரிகள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாக தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரின் தற்கொலைக்கும் மனஅழுத்தமும், உயர் அதிகாரிகளின் நெருக்கடியும் தான் காரணம் எனவும் கூறப்படுகிறது. திருச்செங்கோடு பெண் டி.எஸ்.பி., விஷ்ணுபிரியாவின் தற்கொலை தமிழகத்தில் அரசியல் ரீதியாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேர்மையான அதிகாரியாக இருந்த விஷ்ணுபிரியாவின் தற்கொலையை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் போலீஸ் அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்வது இது புதியதல்ல. இந்தியாவில் காவலர் தற்கொலை எண்ணிக்கையில் இரண்டாம் இடம் வகிக்கிறது தமிழகம். தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 27 போலீஸ் அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய குற்றப்பதிவுத்துறை ஆவணத்தின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் 2006ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை 216 போலீஸ் அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதே காலகட்டத்தில் மகாராஷ்டிராவில் 267 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்திய அளவில் காவல்துறையில் நிகழும் தற்கொலைகள், மரணங்கள் குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவல்படி 2012ல் தமிழகத்தில் மட்டும் 280 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2012ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 58 காவலர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கிறது புள்ளிவிபரம். இந்த எண்ணிக்கை 2011 -ஆம் ஆண்டைவிட 50% அதிகம்.

நாடுமுழுவதும் 821 காவலர்கள் பணியின்போதே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கிறது தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகத்தின் புள்ளிவிபரம்.

2011ம் ஆண்டில் சென்னை மைலாப்பூரில் இன்ஸ்பெக்டர் ஒருவர் தான் தங்கி இருந்த லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது தற்கொலை கடிதத்தில், தனது தற்கொலைக்கு காரணம் உயரதிகாரிகளின் அழுத்தம் என குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு இந்த தற்கொலைகள் அதிகரிக்க துவங்கியது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக காவல்துறையில் டி.எஸ்.பி., முதல் டி.ஜி.பி., வரை அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த மருத்துவ பரிசோதனையில், இவர்கள் அனைவரும் மனஅழுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், கீழ்மட்டத்தில் இருக்கும் போலீசாருக்கு இத்தகைய மருத்துவ சோதனைகள் ஆண்டுதோரும் நடத்தப்படுவதில்லை.

நேர்மையாக இருக்கும் அனைவரும் தற்கொலை செய்து கொள்வதில்லை. உடல்ரீதியான பிரச்னைகள், குடும்ப பிரச்னைகள் ஆகியவற்றுடன் உயரதிகாரிகளின் அழுத்தமும் சேரும் போது தான் இது போன்ற தற்கொலைகள் நடக்கின்றன என்றார்.

விஷ்ணுப்ரியாவின் மரணத்தை ஒரு தனிப்பட்ட வழக்காகப் பார்க்காமல், இதுவரை நடந்துள்ள பெண் காவலர்களின் கொலைகள் மற்றும் மரணங்கள் பற்றி முழுமையாக விசாரணை நடத்தப்படவேண்டும். சி.பி.ஐ விசாரணைதான் அதற்குப் பொருத்தமானதாக இருக்கும் என்கிறார் மூத்த காவல்துறை அதிகாரி திலகவதி ஐ.பி.எஸ்.

தீண்டாமைக் கொடுமை, சாதிய வேறுபாடுகள், சாதி அடிப்படையில் தமிழ்நாடு முழுக்க பரவி வருகிற வன்முறை கலாசாரம், சாதியின் பேரால் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள், இவர்கள் எல்லோருமே விஷ்ணுப்ரியாவின் மரணத்துக்குக் காரணம் என்பதும் அவரது குற்றச்சாட்டு.

2012ம் ஆண்டில் ஆண்டில், 58 பெண் காவலர்கள் இறந்துள்ளனர். இது சாதாரணமான விஷயம் இல்லை. எதற்காக இறந்தார்கள்? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும்.மென்மையான மனதோடு குடும்பத்தில் வளர்க்கப்படும் பெண்கள், காவல் துறை போன்ற சவால்மிகுந்த துறைக்குத் திடீரென வரும்போது, அவர்களுக்குக் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். இந்தத் துறைக்கு வந்தபிறகு, அதற்கேற்ப நாம் பழகிக்கொள்ள வேண்டும். அதுதவிர, பயிற்சிக் கல்லூரியில் பெண் காவலர்களுக்கென தனிப்பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார் திலகவதி ஐ.பி.எஸ். காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் பரிசீலிப்பாரா?

TAGS: