தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்கள், அகதி முகாம்களில் வாழ்பவர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து வாழ்பவர்கள் என இரு பிரிவுகளாக வாழுகின்றார்கள்.
இந்த இரு பிரிவினரையும் தமிழக அரசு ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கின்றது. ஆனால் மத்திய அரசு எம்மை வெவ்வேறாக பிரித்து பார்க்கின்றது.
இதனால் காவல்துறையில் பதிவில் இருக்கும் மக்கள் சொல்லோன துன்பத்தில் மிதக்கின்றார்கள்.
அதேவேளை ஈழத்தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசில் சில எழுதப்படாத சட்டங்கள் இருப்பதாக நாங்கள் எண்ண வேண்டியுள்ளது.
காரணம் முன்னைய காங்கிரஸ் அரசின் சிதம்பரம் அவர்கள் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சட்ட குறிப்புக்கள் பதிப்பினை ஏற்படுத்தியுள்ளன. இந்த பாதிப்புக்கள் எம்மவர்களை முழுமையாக பாதித்துள்ளது.
இவைகளை களைந்து எம்மை ஒரு கௌரவ குடிமக்களாக வாழ வழி செய்யும் திறன் தைரியம் தற்போதுள்ள மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதாக கருதுகின்றோம்.
மிக முக்கியமாக மத்திய அரசின் ஈழ அகதிகளின் அகதிக் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே மாற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு.
மிக முக்கியமான கோரிக்கை என்பது காவல்துறை பதிவில் இருக்கும் எமக்கென எமது தேவைகளை பெற்றுக்கொள்ள ஒரு பொறுப்பான துறையின்மையால் நாங்கள் மிக மோசமாண நிலையில் எந்தவொரு விடயத்துக்கும் தங்களுக்கு கடிதம் எழுதிடும் நிலையுள்ளது.
எனவே முகாம் அகதி மக்களுக்காக இயங்கும் மறுவாழ்வுத்துறை எங்களையும் இணைத்து கவனித்துக்கொள்ள நீங்கள் உதவினால் நாங்கள் என்றென்றும் நன்றி உடையவர்களாக இருப்போம்.
1. தமிழகத்தில் பிறந்து வளர்ந்து கல்வி பயின்று இன்று ஒரு நல்ல மனிதனாக இருக்கும் எமது இளைஞர்கள் (முகாம் மற்றும் காவல்துறை பதிவு) இங்குள்ள தனியார் நிறுவனங்களில் எமது இலங்கை தமிழ் அகதி என்ற அடையாளத்தை மையமாக வைத்து வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ள பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
தமிழக அரசின் மறுவாழ்வுத்துறை பரிந்துரைத்தாலும் ஏற்றுக்கொள்ளாத நிலையே உள்ளது. இதற்காக பலதரப்பட்ட முயற்சிகள் மேட்கொள்ளபட்டு சில மதிய அரசு அரசு உத்தரவுகள் பிறப்பிக்கபட்டுள்ளதாக சொல்லப்பட்டாலும் அவை நடைமுறைக்கு வரவில்லை.
எனவே இங்கு கல்வி பயின்ற அனைத்து அகதி மாணவர்களும் எதுவித நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்படாமல் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு உதவிடல் ( இந்த நிலையால் பட்டபடிப்பு முடித்து கூலி வேலைக்கு செல்லும் நிலை )
2. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப ஒருசில குடும்பங்கள் நாடு திரும்பிட ஆரம்பித்துள்ளார்கள். அதேவேளை பலர் இலங்கை திரும்பிட விரும்பாதநிலையில் இருக்கின்றார்கள்.
தங்கள் அரசும் விருமத எவரையும் ஒரு படி மேலே பிரச்சனை முற்றுப்பெறாமல் திருப்பி அனுப்பிட மாட்டோம் என்று சொன்னது எங்களுக்கு மிக மிக தெம்பாகவே இன்று வரை உள்ளது.
அதேவேளை இந்திய வம்சாவழி தமிழர்கள் தமக்கு குடியுரிமை வழங்க விண்ணப்பித்தும் நீதி மன்றுகளில் வழக்கும் தொடுத்துள்ளார்கள். அதே வேளை இருமாதங்களுக்கு முன்னர் டெல்லியில் 4300 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அகதிகளும் அவர்களது விருப்பினை தேர்ந்தெடுக்க ஏதுவாக மாநில அரசோ அல்லது நாங்களோ ஒரு விபரத்திரட்டினை மேற்கொண்டு அதனை மாநில அரசுக்கு சமர்ப்பித்து அதன் மூலம் நாடு திரும்ப விரும்பாத மக்களுக்கு இந்திய குடியுரிமை அல்லது அதற்கான மாற்று நடவடிக்கை எடுத்து உதவுதல்.
2.1 தமிழகத்துக்கு அகதியாக வந்த பின்னர் தமிழகத்தில் வைத்து பிறந்த குழந்தைகளில் பலர் ( பலருக்கு 25 வயதுக்கு மேல ஆகின்றது) இலங்கைக்கு திரும்பிச்செல்ல விரும்பிடாத நிலையே அதிகளவில் காணப்படுகின்றார்கள்.
எனவே இந்த பிள்ளைகளுடைய எண்ண மன ஓட்டத்தை அறிந்து அவர்கள் விரும்பினால் இந்திய குடியுரிமை அல்லது அதற்கு மாற்றாக வதிவிட அனுமதி ( Residentional Visa ) மற்றும் பயண ஆவணம் ( இந்திய கடவுச்சீட்டு அல்லாத டிரவல் டாக்குமென்ட் ) வழங்குவதன் மூலம் அவர்கள் தங்களுக்கான வேலை வாய்ப்புக்களை வெளிநாடுகளில் பெற்று வாழ்க்கையினை சிறப்பாக அமைத்துக்கொள்ள மத்திய அரசினை வழியுறுத்திட இந்த விபரங்கள் உதவிடும்.
2.2 இந்திய ஆண் / பெண்களை திருமணம், செய்து தமிழகத்திலேயே வாழ விரும்புபவர்களுக்கு அவர்களுக்கு குடியுரிமை வழங்கிடவேண்டும் என தாங்கள் பரிந்துரைக்கும் நிலையில் மத்திய அரசு தங்கள் கருத்துக்கு மதிப்பளித்து நடவடிக்கை எடுக்கும் என கருதுகின்றோம்.
3. காவல்துறை பதிவில் இருப்பவர்களுக்கு அவர்கள் அகதிகள் என்று சான்று அளிக்க எந்த ஆவணமும் இல்லாத காரணத்தால் அவர்களுக்கும் முகாம் மக்களுக்கு உள்ளது போல் அகதி அடையாள அட்டை வழங்கிட தாங்கள் உதவிட மன்றாடி கேட்டுக்கொள்ளுகின்றோம்.
4. தற்போது தமிழக அரசின் மறுவாழ்வுத்துறை வேண்டுகோளுக்கு அமைய முகாம் வாழ் இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படுகின்றது. எனவே காவல்துறை பதிவில் இருப்பவர்களுக்கும் இந்த ஆதார் அட்டை கிடைத்திட தாங்கள் உதவிட மன்றாடி கேட்டுக்கொள்ளுகின்றோம்.
5. காவல்துறை பதிவில் இருப்பவர்களுக்கு முதல்வர் காப்பீட்டுத்திட்டம் நீடித்தமைக்கு மிக மிக நன்றிகள். ஆனாலும் அதனை சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனம் ஒருவருடம் எதுவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தங்களது ஆணையை நாங்கள் தமிழக மறுவாழ்வுத்துறை மூலம் பெற்று நேரடியாக அதிகாரிகளை அணுகி தற்போது காப்புறுதி அட்டை வழங்கும் நிலை தொடருகின்றது.
ஆனாலும் பணி மந்தமாக இருப்பதால் இன்னும் பல மாவட்டங்களில் இது நடைமுறைக்கு வரவில்லை. தாங்கள் எங்களை அனுமதித்தால் நாங்கள் தற்போது சென்னை / திருவள்ளுர் / காஞ்சிபுரம் /திருச்சி செய்வது போன்று அம்மக்களை அழைத்து சென்று அதனை பெற்றுக்கொள்ள உதவிடுவோம் என்பதை தங்கள் பாதம் பணிந்து தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
6. 1983 தொடக்கம் இன்று வரை விமான மூலம் தமிழகம் வந்து தங்கியிருக்கும் ஈழதமிழர்களை இதுவரை அகதிகளாக ஏற்றுக்கொள்ளாமல் மத்திய அரசின் உள்துறை அமைச்சு விசா மூலம் வந்தவர்களை வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் கையாள்வதன் காரணத்தால் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள்.
இவர்களை அகதிகளாக அங்கீகரிக்க படாத காரணத்தால் எமது பிரச்சனைகளுக்கு யாரிடம் சென்று எமக்கான தேவைகளை பூர்த்தி செய்வது என்ற குழப்பமான சூழல் நிலவி வருகின்றது,
தங்கள் தமிழக அரசின் மறுவாழ்வுத்துறை காவல்துறை பதிவில் இருக்கும் மக்களின் விடயங்களில் தலையிட முடியாதென கையை விரித்து விடுகின்றது.
எனவே தற்போதுள்ள சூழலில் மாந்தநேய அடிப்படையில் எம்மை அகதிகளாக வழிவகை செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களின் பல பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
இதன் மூலமாக முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் அகதி மக்கள் போல் இவர்களும் அகதி என்ற அந்தஸ்து மூலம் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்திட இது உதவிடும்.
7. காவல்துறை பதிவில் இருக்கும் விமானம் மூலம் வந்த இலங்கை தமிழ் அகதிகள் தமது தாய் நாட்டுக்கு செல்ல exit Permit பெற விண்ணப்பிக்கும் போது அங்கு எமக்காக அறவிடப்படும் தண்டப்பண கட்டணம் ( 1990களில் வந்த ஒருவர் வருடம் ரூபா 4500.00 வீதம் 112500.00 கட்ட வேண்டும் ) என்பது எம்மை மூச்சு முட்ட வைக்கின்றது.
இதனை முற்றாக நீக்கம் செய்ய வேண்டும் என தங்கள் தமிழக அரசும் இன்னும் பல mமைப்புக்களும் கோரிக்கை வைக்கப்பட்டும் எந்தவிதமான தீர்வும் ஏற்படவில்லை.
இதுபற்றி FRRO திணைக்களத்தில் கேட்கும் போது நீங்கள் அகதிகளாக அங்கீகரிக்கப்படவில்லை அதேவேளை நீங்கள் அனைவரும் வெளி நாட்டவர் சட்டத்தின் கீழ் வருவதால் இந்த கட்டணத்தை செலுத்தியே ஆகவேண்டும் என்ற உத்தரவினை பிறப்பிக்கின்றார்கள்.
காவல்துறை பதிவில் உள்ளவர்களும் அகதிகள் என்பதை வரையறை செய்து எமக்கு இந்த கட்டணத்தில் இருந்து விதிவிலக்கு அளிக்க மத்திய அரசுக்கு எடுத்துரைத்து கட்டண நீக்கத்தை கொண்டுவர தங்கள் பாதம் பணிந்து கேட்டுக்கொள்ளுகின்றோம்.
8. இதே போன்று தமிழகத்தில் வெளிச்செல்லும் அனுமதி தண்டப்பணம் செலுத்திய பின்னர் FRRO சட்டத்தின் கீழ் இலங்கை தமிழ் அகதி என்று அடையாளப்படுத்தும் அனைவரின் வெளிச்செல்லும் அனுமதியில் ( குறிப்பாக கடவுச்சீட்டில்) OVERSTAY என்ற வாசகத்தை பொறிக்கின்றார்கள்.
இது இந்த மக்கள் இலங்கை திரும்பி மீள எந்தவொரு தேவைக்கும் 3 தொடக்கம் 5 வருடங்கள் வரை இந்தியாவுக்குள் வருவதை முழுமையாக தடை செய்கின்றது.
இதன் மூலம் தொடர் மருத்துவ சிகிச்சை பெறுவது கூட தடுக்கப்படுகின்றது. எனவே இந்த OVERSTAY என்ற வாசகம் பொறிக்கப்படுவதன் மூலம் பறிக்கப்படும் மாந்த நேயத்தை தங்களால் மீள பெற்றுகொடுத்து OVERSTAY பொறிப்பதை தடுத்து நிறுத்திட உதவிடுமாறு தங்கள் பாதம் பணிந்து கேட்டுக்கொள்ளுகின்றோம்.
-ச.நடேசலிங்கம்
அகதிகள் நல செயல்ப்பாட்டாளர்
-http://www.puthinamnews.com