“ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பேசினால், இந்தியா சார்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஐ.நா. சபையில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்க பாகிஸ்தான் முயலுகிறது.
அதுபோன்ற தருணத்தில், இந்தியா சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்படும்.
மேலும், எந்தவித சூழ்நிலையையும் எதிர்கொள்ள, இந்தியா தயாராகவே உள்ளது என்றார் விகாஸ் ஸ்வரூப்.
முன்னதாக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் பேசிய அந்நாட்டு அரசின் மூத்த அதிகாரி ஒருவர், “ஐ.நா. சபையில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் எழுப்புவார்’ என்று தெரிவித்திருந்தார். வரும் 30-ஆம் தேதி, ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் நவாஸ் ஷெரீஃப் உரை நிகழ்த்த உள்ளார்.
-http://www.dinamani.com