பாரிஸ்: தமிழ் மொழியின் முதன்மை நூலான தொல்காப்பியத்தை உலக அளவில் பரப்பும் வகையில் நடைபெறும் அகில உலக தொல்காப்பிய மன்றத் தொடக்க விழா நாளை பிரான்சில் நடைபெறுகின்றது.
நாளை (அந்நாட்டு நேரப்படி) காலை 11 மணிக்கு துவங்கி பிற்பகல் 1.30 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியினை முனைவர் கு.இளங்கோவன், தேவிகா இளங்கோவன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கின்றனர். கனடாவைச் சேர்ந்த முனைவர் இ.பாலசுந்தரம் இந்நிகழ்விற்கு தலைமை வகிக்கின்றார்.
உலகத் தொல்காப்பிய மன்றத்தினை துவக்கி வைத்து பிரான்சினைச் சேர்ந்த முனைவர் ழான் லூய்க் சேவியார் சிறப்புரை ஆற்றுகின்றார். பிரான்சில் வசித்து வருகின்ற கவிஞர் கி.பாரதிதாசன் இந்நிகழ்ச்சியில் வரவேற்பு உரை ஆற்றுகின்றார்.
தொல்காப்பியப் பரவலுக்கான வழிவகைகளை ஆராய்தல் என்ற தலைப்பில் இந்தியாவைச் சேர்ந்த முனைவர் சு.அழகேசன் தலைமையில் நடைபெறும் கருத்துரையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முனைவர்களும், கவிஞர்களும் கலந்துரையாடுகின்றனர்.
நிகழ்வின் முடிவாக பிரான்சினைச் சேர்ந்த இலெபோ லூசியா நன்றியுரை வழங்க இருக்கின்றார். லீ ஜிம்னேஸ் விக்டர் ஹீயூகோ ஹாலில் இந்நிகழ்வு நடைபெறுகின்றது என்று விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.