டெல்லி ஜே.என்.யூ.வில் நக்சல்கள்- நேரு பெயரை நீக்கி நேதாஜி பெயர் சூட்டுக: சு.சுவாமியால் சர்ச்சை

subramaniyan_002டெல்லி: புகழ்பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (ஜே.என்.யூ) பணியாற்றும் பேராசிரியர்களும் மாணவர்களும் நக்சலைட்டுகள்- அவர்களை வேட்டையாட போலீஸ் படையை குவிக்க வேண்டும்; அந்த பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்றி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரை சூட்ட வேண்டும் என்றும் பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை முன்வைத்துள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர் ஜஹவர்லால் நேருவின் திட்ட கமிஷனுக்கு மூடுவிழா நடத்தப்பட்டு நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. மத்திய அரசின் சில திட்டங்களில் இருந்து நேருவின் பெயர் அகற்றப்பட்டதாக கூறப்பட்டது.

அண்மையில் இந்திரா, ராஜிவ் காந்தி தபால் தலைகளை மத்திய அரசு நிறுத்துவதாக அறிவித்திருந்தது. இது காங்கிரசாரை கொந்தளிக்க வைத்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமியை மத்திய அரசு நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதனைத் தொடர்ந்து சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில், போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினரை டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நிறுத்தி ஜிஹாதிகள், நக்சலைட்டுகள், புலி ஆதரவாளர்களை வேட்டையாட வேண்டும் என்று கூறியிருந்தார். சுப்பிரமணியன் சுவாமியின் இக்கருத்துக்கு ஜே.என்.யூ. மாணவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகம் குறித்து மேலும் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

ஜஹவர்லால் நேருவை விட அதிகம் படித்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். ஜஹவர்லால் நேரு ஜஸ்ட் 3-ம் தரத்தில் தேர்ச்சி அடைந்தவர். ஆகையால் டெல்லியில் உள்ள ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்றிவிட்டு சுபாஷ் சந்திர போஸ் பெயர் சூட்ட வேண்டும். டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள், மாணவர்கள் நக்சலைட்டுகளாக இருப்பதாக சந்தேகிக்கிறேன். அங்கு போலீஸ் படையை குவித்து அவர்களை வேட்டையாட வேண்டும்.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார். சுவாமி ஒரு ஜோக்கர் சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீக்ஷித் கூறுகையில், ஒருகாலத்தில் சுப்பிரமணியன் சுவாமி நல்ல தலைவராக இருந்தார்… தற்போது ஒரு அரசியல் ஜோக்கராக மாறிவிட்டார் என்று சாடியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: