காஷ்மீர் விவகாரம் மீது பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்துமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூனிடம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வேண்டுகோள் விடுத்தார்.
ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள நவாஸ் ஷெரீஃப், ஞாயிற்றுக்கிழமை பான்-கீ-மூனைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது காஷ்மீர் விவகாரத்தை நவாஸ் எழுப்பியதாக பாகிஸ்தான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா – பாகிஸ்தான் எல்லைக் கோட்டுப் பகுதியில் நிலவும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பதற்றத்தைத் தணிப்பதற்கும் ஐ.நா. சபை பங்களிக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீஃப் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை அமல்படுத்துமாறும், இந்த விவகாரத்தில் காஷ்மீர் மக்கள் பொது வாக்கெடுப்பு நடத்தவே விரும்புவதாகவும் அவர் பான்-கீ-மூனிடம் கூறியதாகத் தெரிகிறது.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தைத் தணிக்க ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை தேவை என்று பான்-கீ-மூன் வலியுறுத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-http://www.dinamani.com