நரேந்திர மோடி ஏன் உலகை கவர்கிறார்… தெரியாத சில ரகசியங்கள்!

உலகளவில் அமெரிக்க அதிபர் ஒபமாவுக்கு பிறகு சமூக வலைதளங்களில் அதிகம் பேர் பின்தொடரும் நபராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். தகவல் தொடர்பு நிறுவனங்களின் உலகத் தலைநகராக கருதப்படும் சிலிக்கான் வேலியே அவரது வருகையால் சிலிர்த்துக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். உலக நாடுகளில் மோடிக்கு ஏன் இவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்றால் அதில் சில ரகசியங்களும் அடங்கியிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி பொலிட்டிக்கல் சயின்சில் முதுகலை பட்டம் பெற்றவர். அதோடு அமெரிக்காவில் ‘இமேஜ் மேனேஜ்மென்ட் மற்றும் பப்ளிக் ரிலேஷன்ஷிப்பில் சிறப்பு பட்டம் பெற்றவர் என்பது நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு ஒரு விஷயத்தை பற்றி மக்களிடம் எப்படி செய்தி சேர வேண்டும் என்பதில் தெளிந்த அறிவு உண்டு. இளம் வயது முதலே ஊர் ஊராக பயணம் மேற்கொள்வதில் மோடிக்கு மிகுந்த ஆர்வம். எங்கே போகிறோம் என்று தெரியாமலேயே மோடியின் பயணம் அமைந்திருக்குமாம். அப்படி ராஜ்கோட் முதல் இமயமலை வரை மோடியின் இளம் வயது பயணம் அமைந்திருக்கிறது. சில காலம் இமயமலையில் சந்நியாசி வாழ்க்கை கூட மோடி வாழ்ந்திருக்கிறார். மோடி வெளிநாடுகளுக்கு ஏன் அடிக்கடி பறக்கிறார் என்பதற்கு இப்போது விடை கிடைத்திருக்கிறதா?

பிரதமர் மோடி ஒரு மிகச்சிறந்த புகைப்பட கலைஞர். அவர் எடுத்த புகைப்படங்களை கொண்டு கண்காட்சியும் நடத்தியிருக்கிறார். அவரது தாய்மொழியான குஜராத்தியில் கவிதையும் புனைந்துள்ளார். சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பிறகு ட்விட்டரில் அதிக ஃபாலோயர்கள் உள்ள தலைவர் மோடிதான். இவரை ட்விட்டரில் ஒரு கோடியே 20 லட்சம் பேர் தொடர்கின்றனர். உலகளவில் மோடிக்கு இதில் 2வது இடம். 1965ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரின் போது மோடியும் நாட்டுக்காக தன்னால் முடிந்த பங்களிப்பை செய்திருக்கிறார். அதாவது ரயிலில் செல்லும் ராணுவ வீரர்களுக்கு உதவி செய்யும் சிறுவனாக பயணித்திருக்கிறார்.

குஜராத் முதலமைச்சராக மோடி 13 ஆண்டுகள் இருந்திருக்கிறார். இதில் ஒருநாள் கூட அவர் விடுமுறை என்று எடுத்ததில்லையாம். இரவு லேட்டாக உறங்க சென்றாலும் மோடியின் விடியல் காலை 5.30 மணிக்கு தொடங்கி விடும். பள்ளி, கல்லூரி காலத்தில் நாடகங்களில் நடிப்பதில் ஆர்வம் உண்டு. பல வேடங்களில் கலக்கியிருக்கிறார். மோடியின் சொந்த ஊரான வத்நகரில் உள்ள ஏரி, முதலைகளுக்கும் வசிப்பிடமாக இருக்கிறது. இளவயது மோடி அந்த ஏரிக்கரையில் விளையாடுவது வழக்கம். கரையில் கிடந்த முதலையிடம் வம்பிழுத்திருக்கிறார். முதலை வாலால் தாக்கி விட சிறிய காயத்துடன் தப்பிய வரலாறும் மோடிக்கு உண்டு.

மோடி குஜராத் முதல்வராக இருந்த போது கடந்த 2010ஆம் ஆண்டு உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் 3வது நகரமாக அகமதாபாத்தை ஃபேர்ப்ஸ் இதழ் தேர்வு செய்தது. முதல் இரு இடங்களை சீனாவின் ஜோக்ஜிங், செங்குடு நகரங்கள் பெற்றன. ஒரு மாநாட்டில் மோடி பங்கேற்கிறார் என்றால் அங்கு பேச வேண்டிய விஷயங்களை ஹோம் வொர்க் செய்து பார்த்து விட்டுதான் மோடி மேடையே ஏறுவார்.

-http://www.dinamalar.com

TAGS: