பருவமழைக்கு ஏற்பவே காவிரியில் இருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விட முடியும் என்று, காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் கர்நாடக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது.
மத்திய நீர் வளத் துறை செயலாளர் சசிசேகர் தலைமையில் காவிரி மேற்பார்வைக் குழுவின் ஐந்தாவது கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய நீர் ஆணையத் தலைவர் ஏபி பாண்டியா, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், பொதுப் பணித் துறைச் செயலாளர் என்.எஸ்.பழனியப்பன், முன்னாள் பொதுப் பணித் துறைச் செயலாளரும், தமிழ்நாடு மின் பகிர்மானம், உற்பத்திக் கழக நிர்வாக இயக்குநருமான எம்.சாய்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் கெüசிக் முகர்ஜி, கேரள அரசின் நீர்வளத் துறைச் செயலாளர் வி.ஜே.குரியன், புதுச்சேரி அரசின் தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சம்பா நெல் சாகுபடியைக் காக்க நீர்: இக்கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் இருந்து செப்டம்பர் 24-ஆம் தேதி வரை 126 டி.எம்.சி தண்ணீரைக் கர்நாடக அரசு திறந்து விட்டிருக்க வேண்டும்.
ஆனால், இதுவரை 78.451 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தமிழகத்துக்குக் கிடைத்துள்ளது. இன்னும் 47.549 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டியுள்ளது.
தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், சம்பா பயிரைக் காப்பாற்றும் நோக்கிலும் தமிழகத்துக்குத் தர வேண்டிய எஞ்சிய நீரை கர்நாடக அரசு உடனே திறந்துவிட உத்தரவிட வேண்டும்.
மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை எவ்விதக் கால தாமதமும் இன்றி அமைக்க வேண்டும்.
இது தவிர, காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த உத்தரவின்படி கர்நாடக மாநிலம், பிலிகுண்டுலு பகுதியில் இருந்து 2015, அக்டோபர் முதல் 2016, ஜனவரி வரையிலும் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 48 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று தமிழகம் கேட்டுக் கொண்டது. இதே கோரிக்கையை புதுச்சேரி அரசும் காவிரி மேற்பார்வைக் குழுவிடம் வலியுறுத்தியது. கேரள அரசும் தங்களுக்கு உரிய நீர் பங்கீட்டு அளவைத் தருமாறு வலியுறுத்தியது.
கர்நாடகம் திட்டவட்டம்: “இந்த ஆண்டு பெய்ய வேண்டிய பருவமழையில் சராசரியைவிட 33 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீரின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. இப்போதுள்ள நீரின் அளவுக்கு ஏற்ப செப்டம்பர் 26-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்துக்கு 82.3 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளோம். இதன்படி, தமிழகத்துக்கு உரிய பங்கீட்டு நீரை அளித்துள்ளோம். கர்நாடக மாநில மக்களின் குடிநீர்த் தேவை, விவசாயப் பயன்பாடு ஆகியவற்றைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையும் உள்ளது.
எனவே, பருவமழையின் அளவைப் பொருத்தே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது’ என்று கர்நாடக அரசு தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, மத்திய நீர் வளத் துறைச் செயலாளர் சசிசேகர், “காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வலியுறுத்தப்படுகிறது.
மேலும், இவ்விவகாரத்தில் இரு மாநிலங்களும் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும்’ என்றும் தெரிவித்ததாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
-http://www.dinamani.com


























மிக்க நன்றி. அப்பத்தான் தமிழ் நாட்டுத் தமிழருக்குப் புத்தி வரும். இந்த அற்ப விசயத்தைக் கூட நடுவண் அரசாங்கம் நிவர்த்தி செய்து வைக்க முடியவில்லை என்றால் அந்த நடுவண் அரசாங்கத்தில் இருந்து என்ன பயன்?. டெல்லியை கேள்வி கேளுங்கப்பா தமிழர்களே!