உலகையே வீரத்திலும், இலக்கியத்திலும் கட்டியாண்ட சாம்ராஜ்யம் கிரீஸ் சாம்ராஜ்ய வம்சாவளியினர் இன்றும் இந்தியாவில் வசித்து வருகின்றனர் என கூறப்படுவது உண்மையிலேயே ஆச்சரியத்தை அளிக்கக்கூடும்.
இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஒரு புராதான கிராமம் தான் மலானா. குலு பள்ளத்தாக்கின் அருகில் அமைந்துள்ள இந்த கிராமம் வெளி உலக தொடர்பில் இருந்து விலகியே உள்ளது.
வெளி நபர்கள் இந்த கிராமத்தினுள் செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. எனினும் தனக்கென்று தனி, கலாச்சாரம், சமூக கட்டமைப்பு, பண்பாடு மொழி ஆகியவற்றை கொண்டுள்ளது.
மேலும் உலகில் மக்களாட்சி முதன்முதலில் தோன்றியது இங்கு தான் என்றும் கூறப்படுகிறது. இந்த கிராமத்துக்கு நீண்ட வரலாறு கூறப்படுகிறது.
அதன்படி கிரீஸ் நாட்டை சேர்ந்த மாமன்னர் அலெக்சாந்தர் இந்தியாவின் மீது படை எடுத்ததாகவும், அப்போது அவரது படை வீரர்கள் வந்து தங்கிய இடம் தான் மலானா என்றும் கூறப்படுகிறது.
பின்னர் இங்கிருந்த பெண்களை மணந்துகொண்ட அவர்களில் சிலர் இங்கேயே தங்கி விட்டனர். எனவே தற்போது இங்கு வசித்து வருபவர்கள் தங்களை அவர்களின் வம்சாவளியினர் என்று நம்பி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இவர்கள் பேசும் கனாஷி (Kanashi) என்ற மொழியை இந்த கிராமத்தினரை தவிர வேறு யாரும் புரிந்துகொள்வது கடினம். ஏனெனில் இது இந்திய மொழி குடும்பத்தை சேர்ந்தது அல்ல என்று மொழி வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இது கிரிஸ் நாட்டில் பேசப்பட்ட ஒரு வகை மொழியின் கிளை மொழியாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கிராமத்தினுள் செல்ல வேண்டும் என்றால் கிராம ஆட்சியாளர்களிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.
அதே நேரத்தில் இக்கிராமத்தில் இருக்கும்எந்தவொரு பொருளையோ, சுவரையோ தொட அனுமதியில்லை. ஏனெனில் மலானா மக்கள் தங்களை மிகவும் புனிதமானவர்களாக கருதுகின்றனர்.
எனவே யாராவது அவர்களுடைய பொருட்களை தொட்டால். அபராதம் கட்ட வேண்டும். இங்கு மலைசரிவுகளில் அதிகமாக கஞ்சா செடிகளே பயிரிடப்படுகிறது.
மேலும் இங்கு பயிரிடப்படும் கஞ்சாவை பசைப்போல் செய்து அவர்கள் தயாரிக்கும் மலானா கிரீம் என்ற போதைப்பொருள் பிரபலமானது. இது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இங்கு செயல்படுத்தப்பட்டுள்ள மலானா நீர்மின் நிலையம் மூலம் ஒரு அளவு வெளி உலகின் வெளிச்சத்துக்கு இந்த கிராமம் வந்துள்ளது. தற்போது புதிதாக அங்கு போடப்பட்டுள்ள சாலை மூலம் பல நாட்கள் மேற்கொள்ள வேண்டிய பயண நேரமும் குறைந்துள்ளது.
எனினும் இந்த பகுதியின் தொண்மையை இவைகள் அழித்து விட்டன என்றே அப்பகுதி மக்கள் எண்ணிவருகின்றனர். ஆக மொத்தத்தில் அவர்கள் வெளியுலக தொடர்பை விட இயற்கையின் தொடர்பையே அதிகம் விரும்புகின்றனர்.
-http://www.newindianews.com