ராமர், கிருஷ்ணர் பிறந்த உ.பி.யில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும்: இஸ்லாமிய அமைப்பு திடீர் போர்க்கொடி

agilesh yatahvலக்னோ, செப்.30- ராமர், கிருஷ்ணர் போன்ற கடவுளின் அவதாரங்கள் பிறந்த உத்தரப்பிரதேசத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என இத்தேஹாத் இ மில்லத் என்ற இஸ்லாமிய அமைப்பு கூறியுள்ளது.

இதுதொடர்பாக, பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த இந்த அமைப்பின் தலைவர் மவுலானா தவுக்கீர் ரஸா கான் கூறியதாவது:-

இந்து மற்றும் முஸ்லிம் மதங்களில் மதுவின் தீமையைப் பற்றி விளக்கி கூறப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் இவ்விரு மதத்தவர்களுக்கும் புன்னிய பூமியாக விளங்குகின்றது. குறிப்பாக, பரேலி பகுதி, சன்னி இனத்தவர்களுக்கும் தியோபந்தி மக்களுக்கும் பக்திக்கான மையத்தலமாக உள்ளது.

இங்கு மது விற்பனை செய்வதை, யாத்திரை ஸ்தலத்தில் மது விற்பதாகவே கருத வேண்டும். சிறுவர்களுக்குகூட கிடைக்கும் வகையில் இங்கு மது விற்பனை மிகவும் தாராளமாக நடந்து வருகின்றது. பழச்சாறு விற்கும் பல கடைகளில் நின்று சிறுவர்கள் மது குடிப்பதை நானே பார்த்திருக்கிறேன்.

எனவே, இங்கு மதுவை தடை செய்ய வேண்டும் என மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ்விடம் நான் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளேன். உத்தரப்பிரதேசத்தில் மதுவுக்கு தடை விதித்தால் இந்து, முஸ்லிம் இருதரப்பு மக்களும் இந்த முடிவை வரவேற்று ஆதரவு தெரிவிப்பார்கள்.

மதுவிலக்கை கொண்டுவந்தால் மாநில அரசின் வருவாயில் பற்றாக்குறை ஏற்படும் என கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வருவாய் இழப்பை வேறுபல வகைகளில் ஈடுசெய்து கொள்ளலாம். ஆனால், மதரீதியான இழப்பை வேறு எதனாலும் ஈடுகட்ட முடியாது.

உதாரணத்துக்கு குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனால், அங்கு அரசின் வருவாயில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மகாத்மா காந்தி பிறந்த மண்ணில் மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளபோது, ராமர், கிருஷ்ணர் பிறந்த உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மதுவிலக்கை ஏன் அமல்படுத்த கூடாது?

அனைத்து தீமைகளுக்கும் மதுவே காரணம் என இஸ்லாம் மதம் வலியுறுத்துகின்றது. மதுவிலக்கை கொண்டுவருவதன் மூலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சமூகக் குற்றங்கள் வெகுவாக குறையும். எனவே, விரைவில் எங்கள் இயக்கத்தின் சார்பில் மதுவுக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம்

இவ்வாறு அவர் கூறினார்.

-http://www.maalaimalar.com

TAGS: