டெல்லி: உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான சர்வதேச ஆலோசனைக் கூட்டங்களில் இந்தியாவும் தொடர்ந்து பங்கேற்று வருகிறது.
ஈராக், சிரியாவின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி மிக கொடூரமான இயக்கமாக உருவெடுத்திருக்கிறது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம். அத்துடன் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை தனி இஸ்லாமிய நாடாகவும் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
இந்த பயங்கரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா தலைமையிலான நாடுகள் உக்கிரதாக்குதல்களை நடத்தி வருகின்றன. மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் அடுத்த இலக்காக ஆப்கானிஸ்தான், இந்தியாதான் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த இயக்கத்தின் விஸ்வரூபத்தை முடக்குவதற்கான சர்வதேச அளவிலான ஆலோசனைக் கூட்டங்களை பல்வேறு நாடுகள் நடத்தி வருகின்றன. அண்மையில் ஹாலந்தில் நடைபெற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் இயக்குநர் ஷரத் குமார் பங்கேற்றார். அக்கூட்டத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இளைஞர்கள் இணைவதைத் தடுப்பதற்கான யுக்திகளை அவர் முன்வைத்தார்.
கடந்த செப்டம்பர் 23 மற்றும் 24-ந் தேதிகளில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 70 நாடுகளைச் சேர்ந்த 240 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதற்கு முன்னதாக இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற இண்டர்போல் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய அதிகாரிகள் 3 பேர் பங்கேற்றனர்.
இதேபோல் ஆஸ்திரேலியா, ஸ்பெயின், இங்கிலாந்து, சுவிஸ், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இந்திய அரசு இந்த விவகாரத்தில் தொடர்ச்சியான ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.