இலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரம்! மத்திய அரசு மீது கடுப்பில் உள்ள ஜெயலலிதா!

modi-and-jayaமத்திய அரசு மீது மிகக் கடுமை​யான கோபத்தில் இருக்கிறார் ஜெயலலிதா. திடீர் கோபத்துக்கு என்ன காரணம்?”

ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைப் பிரச்சினை தொடர்​பாக இந்தியா எடுத்த நிலைப்பாடுகள்தான் முதல்வரின் கோபத்துக்கு அதிகமான காரணம் என்று சொல்லப்படுகிறது.

கடந்த 1-ம் தேதி ஐ.நா. சபை மனித உரிமைகள் கூட்டம் நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ‘இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவையில்லை. இலங்கை அரசே விசாரணை நடத்திக்கொள்ளலாம்’ என்று சொல்லப்பட்டது.

இந்தத் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரித்து உள்ளது. தமிழ் அமைப்புகள், இலங்கைத் தமிழர்கள் இந்தத் தீர்மானத்தைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ‘இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கையே விசாரணை நடத்தினால் எந்த வகையில் விசாரணை நேர்மையாக நடக்கும்?’ என்று இவர்கள் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த செப்டம்பர் 16-ம் நாள் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், ‘இனப்படுகொலை நடத்தியவர்கள் மீது சர்வதேச விசாரணை நடத்தும் வகையிலான தீர்மானத்தை இந்தியா கொண்டுவர வேண்டும்.

இலங்கைக்கு ஆதரவான நிலையை அமெரிக்கா எடுத்தால் அதனை இந்தியா தடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டது.

பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா, அதையே கடிதமாகவும் எழுதினார். ஆனால், மத்திய அரசு இதற்கு செவிசாய்க்காமல் அமெரிக்​காவின் தீர்மானத்தை முழுமையாக ஆதரித்துவிட்டது.

இப்படி மத்திய அரசு நடந்துகொண்டது தெரிய வந்ததும், உடனே கண்டித்து அறிக்கை வெளியிட்டார் ஜெயலலிதா.

சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு செயல்வடிவம் கொடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்காதது எனக்கு ஆறா மனப்புண்ணை ஏற்படுத்தி உள்ளது’ என்று அதில் கூறி இருந்தார்.

மத்திய அரசில் அவருக்கு நெருக்கமாக இருப்பது நிதி அமைச்சர் அருண் ஜெட்லிதான் என்பதால் அவரோடு முதல்வர் பேசினாராம். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் தமிழ் மக்களது விருப்பங்களை பிரதிபலிப்பதாக இல்லை. குறைந்தபட்சம் இதுபோன்ற விஷயங்களிலாவது தமிழக அரசின் கருத்தைக் கேட்டிருக்க வேண்டும்’ என்று சொன்னதாகச் சொல்லப்படுகிறது.

இலங்கை அரசிடம் மனமாற்றம் ஏற்பட்டு உள்ளது என்று சொல்லி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இது இலங்கைத் தமிழர்களுக்கு நன்மையைத் தராது’ என்றாராம் முதல்வர்.

இது சுஷ்மா ஸ்வராஜ் தொடர்புடையது’ என்றாராம் ஜெட்லி!

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், முதல்வருக்குத் தொடர்புகொண்டு பேசியதாகவும் சொல்கிறார்கள்.

இலங்கையை நாம் எதிர்த்தால் அவர்கள், சீனாவுக்கு ஆதரவாக மாறிவிடுவார்கள். அதனால்தான் இந்தியா இப்படி நடந்துகொள்ள வேண்டி வந்தது’ என்றாராம் சுஷ்மா.

இதே காரணத்தை எத்தனை ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டு இலங்கைத் தமிழருக்கு முரண்பாடாக முடிவுகள் எடுக்கப் போகிறோம்?’ என்றாராம் முதல்வர்.

பேச்சுவார்த்தை காரசாரமாகத்தான் இருந்துள்ளது என்றும் சொல்கிறார்கள். ‘மத்திய அரசுடன் இணக்கமாகப் போகத்தான் நினைக்கிறோம். ஆனால், அவர்கள் இணக்கமாகப் போவது மாதிரி நடந்துகொள்ளவில்லை.

எல்லாப் பிரச்னைகளிலும் தமிழகத்துக்கு எதிரான முடிவுகளைத்தான் எடுக்கிறார்கள். நிதி உதவியும் செய்வது இல்லை’ என்று வருத்தப்பட்டாராம் முதல்வர்.

இத்தகைய சூழ்நிலையில் டெல்லிக்குச் சென்று பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் முக்கியஸ்தர்களை சந்திப்பதால் பலன் இல்லை என்று சொல்லி டெல்லி பயணத்தை கேன்சல் செய்யச் சொல்லிவிட்டாராம் முதல்வர்.

இவ்வாறு ஜூனியர் விகடன் இதழில் மிஸ்டர் கழுகு என்ற பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: