வெளிநாடுகளில் இருக்கும் இந்தியரின் கருப்புப்பணம் குறித்து உறுதியான மதிப்பீடு இல்லை
2014 ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக இன்றைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறிய 80 லட்சம் கோடி கருப்பு பணத்தை மீட்கும் நோக்கிலான இந்திய அரசின் திட்டத்தின் கீழ் இதுவரை 3770 கோடி மட்டுமே வெளியில் வந்திருப்பதாகவும் மீதி கருப்புப்பணம் எங்கே என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இந்தியர்கள் தமது கருப்புப்பணத்தை அரசாங்கத்திடம் தாமக முன்வந்து தெரிவிப்பதற்கான மத்திய அரசின் திட்டம் ஒன்று முடிவுக்கு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
அந்த திட்டத்தின் கீழ் 638 இந்தியர்கள் தம்மிடம் இருந்த 3770 கோடி கருப்புப்பணத்தை இந்திய அரசிடம் வெளியிட்டிருப்பதாகவும் அதில் 60 சதவீதம் இந்திய அரசுக்கு அபராதத்தொகையாக கிடைக்கும் என்றும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்தியர்களின் கருப்புப்பணம் சுமார் 80 லட்சம் கோடி வெளிநாடுகளில் இருப்பதாகவும் தான் ஆட்சிக்கு வந்தால் அதைக் கைப்பற்றி மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டுவரப் போவதாகவும், அதன் மூலம் ஒவ்வொரு இந்தியருக்கும் 15 லட்ச ரூபாய் கொடுக்க முடியும் என்று கூறினார் என்றும் எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.
அந்த பின்னணியில் தற்போது அரசிடம் கணக்கு காண்பிக்கப்பட்டிருக்கும் கருப்புப்பணத்தின் தொகை என்பது மிக மிகக் குறைவு என்றும் மத்திய அரசின் முயற்சி தோல்வியில் முடிந்திருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
மத்திய அரசு எதிர்பார்த்த அளவு கருப்புப்பணம் வெளியில் வராததற்கு என்ன காரணம் என்று சென்னையைச் சேர்ந்த பொருளாதார ஆய்வாளர் அருண்குமார் தவேயிடம் தொடர்புகொண்டு கேட்டபோது மொத்த கருப்புப்பணத்தின் அளவு என்று இந்திய அரசியல் வாதிகள் கூறும் தொகை ஊதிப் பெரிதாக்கப்பட்ட தொகை என்று அவர் கூறினார்.
அத்துடன், வெளிநாடுகளில் இருந்ததாக கருதப்பட்ட கருப்புப்பணத்தில் பெருமளவிலான தொகை ஏற்கனவே பல்வேறு வழிகளில் இந்தியாவுக்குள் திரும்ப கொண்டுவரப்பட்டுவிட்டதாகவும், இனிமேல் இந்தியாவுக்குள்ளோ, இந்திய அரசிடம் கணக்கு காட்டும் அளவுக்கோ பெரிய அளவில் கருப்புப்பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருப்பது சந்தேகமே என்றும் கூறினார் அருண்குமார் தவே. -BBC