இந்திய அணுசக்தித் துறையில் பணிபுரிந்த விஞ்ஞானிகளில் 2009-13 காலகட்டத்தில் 11 பேர் இயற்கைக்கு மாறான வகையில் உயிரிழந்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது.
மரணமடைந்த 11 பேரில், விஞ்ஞானிகளையும், பொறியாளர்களையும் சேர்த்து மொத்தம் 8 பேர் வெடி விபத்துகள் மூலமாகவும், தூக்கில் தொங்கியும், நீரில் மூழ்கியும் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள மூன்று பேரில், இருவர் தற்கொலை செய்து கொண்டும், ஒருவர் சாலை விபத்திலும், மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர்.
ஹரியானாவைச் சேர்ந்த ராகுல் ஷெராவத் கடந்த செப்டம்பர் 21ம் தேதி இதுதொடர்பான தகவல்களை கேட்டிருந்தார். இதன் மூலம் பெறப்பட்ட தகவலில் இந்த உண்மை வெளிவந்துள்ளது.
விஞ்ஞானிகள் தற்கொலை 2010 ஆம் ஆண்டு, ட்ராம்பேவில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த இரு சி-பிரிவு விஞ்ஞானிகளின் உடல்கள் அவர்களுடைய வீடுகளில் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 2012 ஆண்டு, ராவத்பாட்டாவில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த சி-பிரிவு விஞ்ஞானியின் உடலும் அவருடைய இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டது. தற்கொலைக்கு காரணம் இந்த 3 பேரில், ஒருவர், நெடுங்காலமாக உடல்நலக் குறைபாட்டினால் அவதிப்பட்டு, இறுதியாக தற்கொலை செய்துகொண்டதாக கூறி போலீசார் வழக்கை மூடியுள்ளனர். மற்ற இருவரின் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
தீ விபத்து 2010 ஆம் ஆண்டு, ட்ராம்பேவில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த இரு ஆராய்ச்சியாளர்கள், ஆய்வுக்கூடத்தில் மர்மமான முறையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக இறந்துள்ளனர்.
தற்கொலைக்கான காரணம் எஃப் கிரேடு விஞ்ஞானி ஒருவர், தனது மும்பை இல்லத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் இன்று வரை கொலையாளி யார் என கண்டுபிடிக்கப்படவில்லை. இதேபோல், இந்தூரில் உள்ள ராஜா ராமன்னா மேம்பட்ட தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்த டி கிரேடு விஞ்ஞானியும் தற்கொலை செய்துகொள்ள, போலீசாரும் அந்த வழக்கை மூடியுள்ளனர்.
கல்பாக்கம் விஞ்ஞானி கல்பாக்கத்தை சேர்ந்த ஒரு விஞ்ஞானி 2013 ஆம் ஆண்டு கடலில் குதித்து உயிரிழந்துள்ளார். மும்பையை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர், தற்கொலை செய்துகொண்டதற்கும், கர்நாடகத்தை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் காளி நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டதற்கும் தனிப்பட்ட காரணங்கள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.