சென்னை: தமிழ்நாட்டில் தலித் படுகொலைகள் உயர்ந்தது ஏன் என்பதற்கு ஜெயலலிதா என்ன பதில் சொல்லப் போகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றதற்குப் பிறகு தலித்துகளின் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தலித்துகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாக வேண்டிய அவலநிலை ஏற்பட்டு வருகிறது.
சமீபத்தில் கடமை உணர்வும், நேர்மையுமிக்க தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இளம் போலீஸ் அதிகாரி விஷ்ணுபிரியா காவல்துறையின் உயர் அதிகாரிகள் கொடுத்த கடும் தொல்லைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்ட செய்தி தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. நேர்மையான அதிகாரிகளின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை விவசாயத்துறை பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலையின் மூலமாக ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பற்ற நிலையில், தலித்துகளுக்கான பாதுகாப்பு முற்றிலும் இல்லாத நிலை ஏற்பட்டு வருவது அனைவரையும் கவலையில் ஆழ்த்துகிறது. சமீபத்தில் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட சிறைச்சாலை குறித்த புள்ளிவிவரங்கள் எல்லோரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
இந்தியாவில் தடுப்பு காவல் சட்டத்தின்படி 2014 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியா முழுவதும் சிறையில் இருக்கும் 3237 பேரில் 1892 பேர், அதாவது, 58 சதவீதம் தமிழகததில் இருக்கிறார்கள் என்கிற செய்தி ஜெயலலிதா ஆட்சியின் மனித உரிமைக்கு எதிரான போக்கை உறுதிப்படுத்துகிறது. இதில் 37 பேர் பெண்கள் என்பது இன்னும் கவலையை அதிகப்படுத்துகிறது.
இந்த எண்ணிக்கை 2013 இல் 1781 ஆக இருந்தது, ஒரே ஆண்டில் கூடுதலாக 1892 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது மனித உரிமைகளுக்கு எதிரான மிகப்பெரிய கொடுமையாகும். மேலும் இந்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்ததில் தமிழகத்தில் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் இருப்பவர்களில் 1002 பேர், அதாவது 53 சதவீதத்தினர் தலித்துகள் என்பதுதான் எல்லாவற்றையும்விட மிகக் கொடூரமான நடவடிக்கையாகும்.
இதில் 886 பேர் படிப்பறிவில்லாதவர்கள். எந்த தலித் மக்களை ஆட்சியாளர்கள் சட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறு அரவணைத்து பாதுகாக்க வேண்டுமோ, அவர்களை எவ்வித காரணமும் இல்லாமல் தடுப்பு காவல் சட்டம் என்கிற போர்வையில் நீண்டகாலம் சிறையில் அடைத்து வைத்திருப்பதற்கு ஜெயலலிதா பதில் சொல்லியாக வேண்டும்.
அதேபோல தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் மேலும் புள்ளி விவரங்களோடு உறுதிப்படுத்துகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டில் வடஇந்திய மாநிலங்களை விட தமிழகத்தில் தலித்துகள் அதிகளவில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 2013 இல் 28 ஆக இருந்த தலித் படுகொலைகள் 2014 இல் 72 ஆக ஏன் உயர்ந்தது என்பதற்கு ஜெயலலிதா என்ன பதில் சொல்லப் போகிறார்?
எனவே, தமிழகத்தில் அதிகரித்து வரும் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் குறித்து உண்மை நிலையை அறிந்து கொள்வதற்கும், தடுப்பு காவல் சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தலித்துகளின் உண்மை நிலையை அறிந்து கொள்ள வெள்ளை அறிக்கை ஒன்றை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
அப்படி வெளியிட தவறினால் தமிழகத்திலுள்ள தலித்துகள் ஜெயலலிதா ஆட்சியை தூக்கி எறிய தயாராக வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.