உதயமானது உலக தொல்காப்பிய மன்றம்- சர்வதேச ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்!

tholkaappiyamபாரீஸ்: உலக தொல்காப்பிய மன்றம் பிரான்ஸின் பாரீசில் தொடங்கப்பட்டு உலக நாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடக்க விழா கடந்த செப்டம்பர் 27-ந் தேதியன்று பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது.

தொடக்க விழா நிகழ்ச்சி கனடாவைச் சேர்ந்த முனைவர் இ.பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. பொறியாளர் கு.இளங்கோவன், அவரது துணைவியார் தேவிகா இளங்கோவன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தனர்.

தொல்காப்பிய மன்றத்தின் வளர்ச்சிக்குத் தம் கொடையாக ரூ 1 லட்சம் வழங்குவதாகவும் அவர்கள் அறிவித்தனர். தொல்காப்பிய ஆய்வறிஞர் மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் திருவுருவப் படத்தை முனைவர் ஈவா வில்டன் திறந்துவைத்தார்.

கவிஞர் கி.பாரதிதாசன் அனைவரையும் வரவேற்றார். உலகத் தொல்காப்பிய மன்றத்தின் நோக்கம் குறித்து முனைவர் மு.இளங்கோவன் உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக “செவாலியே” இரகுநாத் மனே கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

தொல்காப்பிய ஆய்வுகள் குறித்து முனைவர் ழான் லூய்க் செவியார் உரையாற்றினார். செளதி அரேபியா சுரேஷ் பாரதி, இலண்டன் அரிசு, நெதர்லாந்து கோபி, வதனா கோபி, பேராசிரியர் தசரதன், பேராசிரியர் தளிஞ்சன் முருகையன், முனைவர் அலெக்சிஸ் தேவராஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைத்தனர்.

tholkaappiyam1

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ நிகழ்ச்சியை வழிநடத்தினார். இலெபோ லூசியா நன்றியுரை வழங்கினார். தொடக்க விழா நிகழ்வில் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்த முனைவர் சு. அழகேசன், முனைவர் இ.சூசை, பொறியாளர் செ. அசோகன்,முனைவர் கருப்பத்தேவன், மருத்துவர் இராசேசுவரி அழகேசன் ஆகியோர் பிரான்ஸ் அரசின் விசா கிடைக்காத காரணத்தால் கடைசி நிமிடத்தில் பயணத்தைத் தொடரமுடியாமல் போனது.

தொல்காப்பியர் பிறந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் காப்பிக்காட்டில் கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வரும் தொல்காப்பிய கழகம் வழங்கிய வாழ்த்து மடலும் அதன் செயல்பாடுகள் அடங்கிய 45 பக்க தொகுப்பு நூலும் தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட்டது.

உலக நாடுகளுக்கான தொல்காப்பிய மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். செளதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கான உலக தொல்காப்பிய மன்ற ஒருங்கிணைப்பாளராக சுரேஷ் பாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.

சுரேஷ் பாரதி தனது உரையில், 2700 ஆண்டு வரலாறு கொண்ட தொல்காப்பியருக்கு காப்பிக்காட்டில் சிலையும் தொல்காப்பிய இலக்கிய மண்டபமும் விரைவில் தமிழக அரசு அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் தொல்காப்பியரின் ஆசிரியரான அப்பன் அதங்கோட்டு ஆசானுக்கு சிலை அமைத்துத் தந்த முன்னாள் முதல்வர் எம்,ஜி. ஆருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

tamil.oneindia.com

TAGS: