இலங்கை உண்மையில் நட்பு நாடா… உலகையும் சேர்த்து ஏமாற்றுகிறது! – கருணாநிதி

karunanithy_001சென்னை: சர்வதேச அரங்கில் நாடகமாடி இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் இலங்கை ஏமாற்றி வருகிறது என்று கருணாநிதி குற்றஞ்சாட்டி உள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

”ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கச்செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினரும், சிங்கள மீனவர்களும் மிரட்டி, தாக்கி, கைது செய்து கொண்டு போய் சிறையிலே அடைப்பதும், மீன்பிடிச் சாதனங்களையும், படகுகளையும் சேதப்படுத்துவதும், உடனடியாக மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் எப்போதும் போல் கடிதம் எழுதுகிறாரோ இல்லையோ, பத்திரிகைகளில் அதைப் பெரிதாகச் செய்தி வெளியிடச் செய்துகொள்வதும் அதன் வாயிலாக மீனவர் பிரச்னை தீர்ந்து விட்டதாக வெறும் கற்பனை செய்துகொள்வதும் தான் வழக்கமாக நடைபெறுகிறதே தவிர; தமிழக முதலமைச்சரின் கடிதங்களை பற்றி இந்திய அரசும், இலங்கை அரசும் சிறிதேனும் கண்டுகொள்வதாகவோ கவலைப்படுவதாகவோ தெரியவில்லை.

mk

மாறாக, இலங்கை அரசே அவர்கள் விரும்பும் போது, மீனவர்களை விடுதலை செய்து அனுப்புகிறார்களே தவிர, கைது செய்த மீனவர்களை இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று விடுவிப்பதில்லை. நேற்றைய தினம்கூட நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த 19 மீனவர்களை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்று, யாழ்ப்பாணம் சிறையிலே அடைத்து வைத்துள்ளார்கள்.

இலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் ஆண்டுக்கு 65 நாட்கள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும், எல்லை தாண்டும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது; என்ற இந்திய அரசின் பரிந்துரைகளை இலங்கை அரசு நிராகரித்து விட்டதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர், சம்பந்தன் அங்கே பேசும்போது, “இந்தியா-இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டும் பிரச்னை இரண்டு நாட்டு மக்களிடையே பகையை ஏற்படுத்துகிறது.

இதனைத் தீர்க்க இரண்டு நாட்டு அரசுகளும் இதற்கு முன் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டன. இந்த பிரச்னைக்கு ஒரே தீர்வு இலங்கை கடற்படை, இந்திய கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்பு படையுடன் இணைந்து ரோந்து பணியிலே ஈடுபட வேண்டும். இதன் மூலம் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் நுழைவதை தடுக்க முடியும். மேலும், இரண்டு நாட்டு மீனவர்களும் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்கும் வகையில் தங்கள் படகுகளை மேம்படுத்திக்கொள்ள அரசு உதவ வேண்டும்,” என்று தெரிவித்திருக்கிறார்.

இதனைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் மகிந்த அமர வீர, ‘இலங்கை கடற்பகுதியில் ஆண்டுக்கு 65 நாட்கள் மீன் பிடிக்கத் தமிழக மீனவர்களை அனுமதிக்க வேண்டும், எல்லை தாண்டும் மீனவர்கள் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்பது போன்ற 6 பரிந்துரைகள் இந்திய அரசின் சார்பில் வைக்கப்பட்டுள்ளன. இந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று நெடுங்காலமாக மீனவர்களை நெருக்கடிக்கும் இன்னல்களுக்கும் ஆளாக்கி வரும் பிரச்னைகளைப் பற்றி மனிதாபிமானத்தோடு சிறிதும் கருதிப் பார்க்காமல், திட்டவட்டமாக இந்திய அரசின் முகத்தில் அடித்ததைப் போலத் தெரிவித்திருக்கிறார்.

‘இலங்கை நட்பு நாடு’ என்றும், பிறநாட்டு இறையாண்மையில் தலையிட முடியாது என்றும் கூறிக்கொண்டு, இலங்கை அரசின் மீது எவ்வளவோ அபிமானமாக இந்திய அரசு நடந்து கொண்ட போதிலும், இலங்கை அந்த அளவுக்கு இந்தியாவோடு நட்புறவு பாராட்டுகிறதா என்பதை இலங்கை அமைச்சரின் இந்த பதிலில் இருந்தே புரிந்து கொள்ளலாம்.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டு வந்ததையே முதல் நாள் அங்கே ஆதரித்துவிட்டு, மறுநாளே அந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அதிபர் பேட்டியளித்தார்.

எனவே இலங்கை சிங்கள அரசு, இந்தியாவையும் மதிக்கவில்லை, உலக நாடுகளையும் பற்றி கவலை கொள்ளவில்லை என்பதையும், பூகோள ரீதியாக இலங்கையின் அமைப்பை பயன்படுத்திக் கொண்டு சர்வதேச அரங்கில் நாடகமாடி, இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் ஏமாற்றி வருகிறது என்பதையும் இந்திய மத்திய அரசு இப்போதாவது உணர்ந்து கொண்டு, தமிழ் மீனவர்களையும், அவர்களுடைய வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்,” என்று கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: