சகிப்புத்தன்மை குறித்து பாடம் நடத்த வேண்டாம்: பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

33சகிப்புத் தன்மை, பன்முகத் தன்மை ஆகியவை குறித்து இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாடம் நடத்த வேண்டாம்; பயங்கரவாதச் செயல்களை பாகிஸ்தான் ஊக்குவிக்காமல் இருந்தாலே, இருதரப்பு உறவுகளும் மேம்படும் என்று இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

தங்கள் நாட்டைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இந்தியாவில் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு, அடிப்படைவாத அமைப்புகள் இடையூறு ஏற்படுத்தி வருவது கவலை அளிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை இரவு தெரிவித்திருந்தது.

பாகிஸ்தானின் பிரபல கஜல் இசைப் பாடகர் குலாம் அலி, மும்பையில் அண்மையில் இசை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், சிவசேனை கட்சியினரின் எதிர்ப்பால் அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இதேபோன்று, மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் குர்ஷித் மக்மூத் கசூரியின் நூல் வெளியீட்டு விழாவுக்கு, சிவசேனை கட்சியினர் இடையூறு ஏற்படுத்தினர். அத்துடன், அந்த விழாவின் ஏற்பாட்டாளரும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான சுதீந்திர குல்கர்னி மீது சிவசேனை கட்சித் தொண்டர்கள் கருப்பு பெயின்ட்டை ஊற்றி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி, தங்கள் தரப்பு வருத்தத்தை தெரிவித்துள்ள பாகிஸ்தான், தங்கள் நாட்டினரை மையப்படுத்தி நடந்துள்ள இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் இந்தக் கருத்துக்கு பதிலடி தரும் வகையில், மத்திய அரசு வட்டாரங்கள் தில்லியில் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

சகிப்புத்தன்மை, பன்முகத் தன்மை தொடர்பாக பாகிஸ்தான் தற்போது பேசி வருகிறது. இவை குறித்து இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாடம் நடத்த தேவையில்லை.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற தனிச் சிறப்பு கொண்ட இந்தியாவில் சகிப்புத் தன்மை, பன்முகத் தன்மை ஆகியவற்றில் ஒருவேளை தொய்வு ஏற்பட்டால், அவற்றைச் சரிசெய்து கொள்ளும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்பட, பயங்கரவாதச் செயல்களை பாகிஸ்தான் ஊக்குவிக்காமல் இருப்பது அவசியமாகும்.

ஆனால், ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லைப் பகுதிகளில், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மேலும், பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூரில் சில மாதங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் தூண்டுதல் இருப்பதாகத் தெரிகிறது.

இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்தினாலே, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பலப்படும்.

மாறாக, பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு, இந்த விஷயத்தில் பாகிஸ்தான் உலக அரங்கில் நாடகமாடுகிறது.

ரஷியாவின் உஃபா நகரில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, இந்தியா- பாகிஸ்தான் இடையே, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையை நடத்த தற்போதும் இந்தியா ஆர்வமாக உள்ளது.

ஆனால், அதற்கு பாகிஸ்தான் தனது பயங்கரவாத நடவடிக்கைகளை முதலில் நிறுத்த வேண்டும். மேலும் இருநாடுகளுக்கு இடையேயான அமைதி முயற்சிகளுக்குத் தடையாக, அங்கு செய்யப்பட்டு வரும் உள்நாட்டு அரசியலுக்கும் பாகிஸ்தான் தீர்வு காண வேண்டும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒபாமாவின் கவனத்துக்கு கொண்டு செல்ல ஷெரீஃப் திட்டம்

இஸ்லாமாபாத், அக்.13: அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பின்போது, இந்திய-பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது தொடர்பான பிரச்னையை, அவரது கவனத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கொண்டு செல்வார் என்று அந்நாட்டு தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்கள், இரு நாடுகளிலும் பதற்றமான சூழலை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இந்தப் பிரச்னை உலக அமைதிக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். அவர், அமெரிக்க அதிபர் ஒபாமாவை, வரும் 22-ஆம் தேதி சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அவர், இந்தியா-பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஒபாமாவுடன் விரிவாக ஆலோசனை நடத்தவுள்ளார்.

மேலும், இந்தியாவின் உளவு அமைப்பான “ரா’ போன்றவை, பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக மேற்கொண்டுவரும் நாசவேலைகள் தொடர்பான அமெரிக்காவின் ஆவணங்கள், ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கி-மூனிடம் அண்மையில் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இந்த ஆவணங்கள், பாகிஸ்தானின் இதர நட்பு நாடுகளுடனும் பகிர்ந்து கொள்ளப்படும் என்று சர்தாஜ் அஜீஸ் தெரிவித்தார்.

-http://www.dinamani.com

TAGS: