சென்னை : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். சென்னை ஐகோர்ட் வக்கீல் கே.கே.ரமேஷ் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு: சென்னை ஐகோர்ட் டில் கடந்த 2010 முதல் 14ம் ஆண்டு வரை 12 ஆயிரத்து 527 கோர்ட் அவமதிப்பு வழக்குகளும் மதுரை உயர்நீதிமன்றத்தில் 8 ஆயிரத்து 475 அவமதிப்பு வழக்குகளும் நிலுவையில் உள்ளது என்று தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற்றேன். சென்னை, மதுரை உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை தமிழக அரசு அதிகாரிகள் அமல்படுத்துவது இல்லை. இதனால் சுமார் 20 ஆயிரம் பேர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்துவிட்டு உத்தரவுக்காக காத்திருக்கிறார்கள்.
தமிழக அரசு அதிகாரிகள் தவறான தகவல்களை கொடுத்துவிட்டு சட்டத்தின்பிடியில் இருந்து தப்பிக்க பார்க்கிறார்கள். நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தமிழக தலைமைச் செயலாளர் விரைவாக முடிக்கவேண்டும் என்று உத்தரவிட்ட பின்னரும் அமல்படுத்தவில்லை. அவமதிப்பு வழக்கை அமல்படுத்தாக அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை செயலாளர் உத்தரவிட்ட பின்னரும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். மனுவை தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சிவஞானம் ஆகியோர் இன்று விசாரித்தனர். அரசு வக்கீல் மூர்த்தி ஆஜராகி, ‘‘அவமதிப்பு வழக்கில் அரசு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறது. எல்லாத்துறை அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்’’ என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள் கூறியதாவது: நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கும் தினந்தோறும் ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் எண்ணிக்கை குறையவில்லை. நாளுக்கு நாள் நீதிமன்றத்தில் பணி பளு அதிகமாகி வருகிறது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசு முதல் இடத்தில் உள்ளதாக தோன்றுகிறது. நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அப்படியிருந்தும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அதிகாரிகள் தயங்குகின்றனர். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டும் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர்.
எனவே, தலைமை செயலாளர் கடந்த ஓராண்டில் கோர்ட் உத்தரவை அமல்படுத்தாத எத்தனை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார். எத்தனை உத்தரவுகள் பிறப்பிக்கப்படாமல் உள்ளது. எத்தனை வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்ற விவரங்களை சேகரித்து அடுத்த மாதம் 23ம் தேதி அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் ஐகோர்டில் எத்தனை அவதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்ற விவரங்களை ஐகோர்ட் பதிவாளர் தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-http://www.dinakaran.com